ஆப்கானில் இந்திய விமானம் விபத்தில் சிக்கியதா? : அமைச்சகம் பதில்!

Published On:

| By christopher

வடக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் படக்ஷான் மாகாணத்தில் உள்ள டோப்கானா மலைப்பகுதியில் நேற்று (ஜனவரி 20) இரவு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் விபத்தில் சிக்கியது இந்திய பயணிகள் விமானம் என்று ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அது மொராக்கோவில் பதிவுசெய்யப்பட்ட DF-10 (Dassault Falcon) சிறிய விமானமாகும். இந்திய பயணிகள் விமானம் அல்ல.

ஏர் ஆம்புலன்ஸ் விமானமான அது, தாய்லாந்தில் இருந்து மாஸ்கோவிற்கு பறந்து செல்லும்போது, கயா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”விபத்தில் சிக்கியது மொராக்கோவில் பதிவுசெய்யப்பட்ட DF-10 என்ற சிறிய விமானமாகும், இது படாக்ஷான் மாகாணத்தின் குரான்-முன்ஜான் மற்றும் ஜிபக் மாவட்டங்களுடன் டோப்கானா மலைகளில் விழுந்து நொறுங்கியது” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே நேற்று (ஜனவரி 20) மாலை ஆப்கானிஸ்தானில் 6 பயணிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய பதிவு செய்யப்பட்ட விமானத்துடனான தொடர்பை இழந்ததாக ரஷ்ய விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட Dassault Falcon 10 ஜெட் விமானமாகும். அந்த விமானம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் செல்லும் வாடகை விமானம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாட்டில் தடை? : நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு… சேகர்பாபு மறுப்பு!

அயோத்தி – ஸ்ரீரங்கம் – ராமேஸ்வரம்:  மோடி புதுப்பித்த புராண முடிச்சு! 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share