துபாய் இளவரசியைக் கடத்த உதவியதா இந்தியா?

இந்தியா

துபாய் ஆட்சியாளரின் மகள் 2018ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பிச் சென்றபோது கோவா கடற்கரையில் இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் புகார் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்புகாரில் இந்தியாவின் கடலோரக் காவல் படையினரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரிட்டன் நீதிமன்றம் வழங்கிய உண்மை கண்டறியும் தீர்ப்பில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பியோடிய லத்தீஃபாவை – துபாயின் ஆட்சியாளரான அவரது தந்தை முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வேண்டுகோளின் பேரில் சர்வதேச கடற்பகுதியில் வலுக்கட்டாயமாக சிறை பிடிக்க இந்தியா உதவியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல் குறித்து டெல்லி ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், லத்தீஃபாவைப் பிடிக்க உதவுவது,ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஆயுத வியாபாரி கிறிஸ்டியன் மைக்கேலை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒப்படைக்க வழிவகுத்தது என்ற கோணத்தில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

யார் இந்த லத்தீஃபா ?

ஷேக்கா லத்திஃபா பின்ட் முகமது துபாயின் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதம மந்திரி ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளும் ஆவார். 32 வயதான லதீபா தானும் தனது மூத்த சகோதரி ஷம்சாவும் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பலவந்தமாக போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும் கூறி 2002-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இந்தியப் படைகளால் பிடிக்கப்பட்டாரா ?

பிப்ரவரி 2018-ல், லத்தீஃபாவும் அவரது தோழி டீனா ஜவ்ஹியானும் மீண்டும் தங்களது குடும்பத்தினரிடமிருந்து தப்பித்து அமெரிக்கா சென்று அடைக்கலம் கோர முடிவு செய்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் ஓமானி கடற்கரையிலிருந்து ஜெட் ஸ்கை மூலமாக கடல்வழியே தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. லத்தீஃபா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பித்து இந்தியா வழியாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த நிலையில் ஒரு வார கடல் பயணத்திற்குப் பிறகு கோவா கடற்கரையில் இருந்தபோது, இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்டோக்களால் படகு சோதனை செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.பின்னர் அவரது தந்தை ஷேக் முகமது கோரியதன் பெயரில் அவர் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

லத்தீஃபா பிடிபட்ட பிறகு, பிரிட்டிஷ் மனித உரிமை வழக்கறிஞர் டேவிட் ஹைக், லத்தீஃபா தப்பியோட முயன்றதன் காரணம் என்ன என்பதை விளக்கும் வகையிலான வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது தந்தையை குற்றம் சாட்டிய லத்தீபா, தனது குடும்பத்தினரால் தான் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும், வீட்டு சிறையில் வைக்கப்படுவதாகவும் தனக்கு தனது குடும்பத்தாரிடம் இருந்து சுதந்திரம் வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ சர்வதேசஅளவில் கவனம் பெற்று லத்தீபாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் லத்தீஃபா தனது குடும்பத்தின் பராமரிப்பில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியபோது, ​​மற்றொரு வீடியோவும் வெளியானது. அதில் அவர் மருத்துவம் மற்றும் சட்ட உதவி கிடைக்காமல் துபாய் வில்லாவில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஜூன் 2021-ல் துபாயில் உள்ள ஷாப்பிங் மால்களிலும், ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் விமான நிலையத்திலும் ஐஸ்லாந்திலும் லத்திஃபா சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் வெளியிடப்பட்டன.

மேலும் பிப்ரவரி 2022ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் லத்தீஃபா “நான் விரும்பியபடி வாழ்கிறேன்” என்றும் கூறியிருந்தார். மேலும் பாரிஸில் அப்போதைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் மிச்செல் பேச்லெட்டுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டு லத்தீஃபா தனது குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ்வது போன்ற செய்திகள் வெளியாகின.

குற்றச்சாட்டை ஏற்கிறதா இந்தியா ?

இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் இதுவரை எந்தவித எதிர்ப்பும், கருத்து தெரிவிக்கவில்லை.

ஏப்ரல் 2018 இல், பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்ட செய்தியில் , அடையாளம் தெரியாத அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அரசியல் நலன்களுக்கு இது அவசியம் என்று முக்கிய தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இந்த சிறைபிடிப்பிற்கு அங்கீகாரம் அளித்ததாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான கூட்டாண்மை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வலுவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2018 டிசம்பரில், விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராகக் குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை அந்த மாதம் இந்தியாவுக்கு நாடுகடத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இது லத்தீஃபாவைக் கைப்பற்ற டெல்லி வழங்கிய உதவிக்கு ஈடாக நடந்தது என்ற கருத்துக்களும் பரவி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகாரில் துணை ஆவணமாக இணைக்கப்பட்ட குற்ற அறிக்கை இந்திய “ஆயுதப் படைகள்” என்று பெயரிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் “சர்வதேச கடற்பகுதியில் அமெரிக்க கொடியிடப்பட்ட படகில் சட்ட விரோதமாக ஏறுதல், ஆயுதம் ஏந்திய தாக்குதலில் ஈடுபடுதல் மற்றும் கடுமையான உடல் காயம், கொலைச் சதி, உயிருக்கு அச்சுறுத்தல், கடத்தல் மற்றும் சட்டவிரோத காவலில் வைத்தல், அத்துமீறி நுழைதல், திருட்டு மற்றும் சொத்துக்களுக்கு சட்டவிரோத சேதம் விளைவித்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றங்களில் இந்தியக் கடலோரக் காவல்படைக் கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை இந்தியா மீறுவதாக மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலும் குற்றம் சாட்டியுள்ளது.

சண்முகப் பிரியா

சந்திரயான்-3: இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விஜய் கூட்டும் ஐடி விங் கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *