ஈரான் நாட்டில் 20 ஆண்டுகளில் 200 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
பழமைவாத நாடான ஈரான் நாட்டில் சின்ன குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவது உண்டு. நடப்பாண்டில் மட்டும் இதுவரை 345 பேர் ஈரான் நாட்டில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதில், 15 பெண்களும் அடக்கம். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இருந்து கொண்டே 20 ஆண்டுகளாக தனிநபர் ஒருவர் 200 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் ஹமாதீன் என்ற நகரத்தை சேர்ந்தவர் சல்மாத். இவர் பார்மசி மற்றும் ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். 43 வயதான இவர் கடந்த 20 வருடங்களாக பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு, கர்ப்பமான பெண்களுக்கு கருவை கலைக்க மாத்திரையும் கொடுத்துள்ளார்.
இதுவும் ஈரான் நாட்டு சட்டப்படி கடும் குற்றம் ஆகும். நடப்பாண்டு தொடக்கத்தில் சல்மாத்தின் அராஜகங்கள் குறித்து வெளியே தகவல் பரவியது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஹமாதீன் நகர நீதிமன்றங்களில் கூடினர். சல்மாத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோஷமிட்டனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் சல்மாத்துக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, நேற்று அவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். ஈரான் நாட்டில் தனி நபர் ஒருவரால் நடத்தப்பட்ட அதிகபட்ச பலாத்காரங்கள் இதுவாகும்.
கடந்த 1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் 20 குழந்தைகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. அந்த இளைஞரும் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 – திமுகவுக்கு தோல்வி பயம் : ராமதாஸ் விமர்சனம்!
அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 – திமுகவுக்கு தோல்வி பயம் : ராமதாஸ் விமர்சனம்!