உலக மக்கள்தொகை மதிப்பாய்வு (WPR) பட்டியலின்படி, உலகின் முதல் அரசாங்கம் ஈரானில் கிமு 3200-இல் நிறுவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் உலகின் மிகப் பழமையான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இந்த பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஆரம்பகால அரசாங்கமானது கிமு 2000 ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை மதிப்பாய்வு வெளியிட்டுள்ள பட்டியலில் உலகின் பழமையான நாடுகளின் வரிசையின்படி, ஈரான் கி.மு 3200 ஆண்டுகள், எகிப்து 3100, வியட்நாம் 2879, அர்மேனியா 2492, வட கொரியா 2333, சீனா 2070, இந்தியா 2000, ஜார்ஜியா 1300, இஸ்ரேல் 1300, சூடான் 1070 மற்றும் ஆஃப்கானிஸ்தான் 678 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் என்ன இருக்கிறது?
மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய குடியரசு நாடு ஈரான். ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை இதன் அண்டை நாடுகளாக உள்ளன. ஆரம்பத்தில் ஈரான் நாடானது பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. இதன் தலைநகராக தெஹ்ரான் உள்ளது.
நிலப்பரப்பின் அடிப்படையில் உலகின் 17-ஆவது மிகப்பெரிய நாடாக ஈரான் உள்ளது. இங்கு 86 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஈரான் உலகின் மிக பழைமையான நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.மு 3200-ஆம் ஆண்டு காலத்தில் எலமைட் பேரரசு ஈரானை முதன் முதலாக ஆட்சி செய்தது.
கிபி 651 காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈரானை கைப்பற்றினர். பின்னர் இங்கு இஸ்லாமியப் பேரரசுகள் பாரசீக மொழியையும், இஸ்லாம் பண்பாட்டையும் நாடு முழுவதும் பரப்பினர். இதில் தகிரியர், சபாரியர், சமானியர், புயியர் போன்றோர் மிக முக்கிய பேரரசுகளாக உள்ளனர்.
இங்கு 1906-ஆம் ஆண்டு பாரசீக அரசியலமைப்பிற்கு உட்பட்ட நாடாளுமன்றம் கட்டப்பட்டது. 1979-ஆம் ஆண்டு ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாக உருவானது. ஷியா முஸ்லீம் இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாகவும், பாரசீகம் அலுவல் மொழியாகவும் உள்ளது.
ஈரான் நாட்டில் 30 மாகாணங்கள் உள்ளது. மாகாணங்கள் முறையே நியமிக்கப்பட்ட ஆளுநரால் ஆட்சி செய்யப்படுகிறது. நாட்டின் குடியரசு தலைவர் அந்நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை கொண்டுள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஈரான் நாட்டின் தற்போதைய குடியரசு தலைவராக இப்ராஹிம் ரைசி உள்ளார்.
ஈரானில் 26 பாரம்பரிய கலாச்சார தளங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அதிக மக்கள் தொகை நெருக்கடி உள்ள நாடாக ஈரான் உள்ளது. இங்கு கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் மக்கள் தொகையானது 27 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இதனால் டெஹ்ரான், இஸ்ஃபஹான், அஹ்வால், கொம் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை நெருக்கடி அதிகளவில் உள்ளது.
2005-ஆம் ஆண்டு முதல், ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா ஈரானை கடுமையாக எதிர்த்தது.
இதனால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையானது ஈரானை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மற்ற உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தியது

இங்கு புதை படிவ பொருட்கள் அதிகளவில் உள்ளதால், ஈரான் எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. ஈரானிலிருந்து வெனிசுலா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றிற்கு 1.23 பில்லியன் பேரல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இப்படி பல சிறப்பம்சங்களை பெற்றுள்ள ஈரானை, உலகின் மிகப்பழமையான நாடுகளில் முதலாவது நாடாக உலக மக்கள்தொகை பதிப்பாய்வு அறிவித்துள்ளது.
செல்வம்