ஈரான் நாட்டிலும் யூத மக்கள் வாழ்கின்றனர். இவர்கள், அங்கு மைனாரிட்டியாக கருதப்படுகின்றனர். இந்த நிலையில், ஈரானிய யூத இளைஞரை கொலை குற்றத்துக்காக பொதுவெளியில் ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேலில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் யூத இளைஞர் தூக்கில் போடப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ஹெர்மன்ஷா பகுதியை சேர்ந்த 20 வயது யூத இளைஞர் ஆர்வின் நாதெனியல் என்பவருக்கும் அமிர் சோக்ரி என்ற மற்றொரு இளைஞருக்கும் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது .
இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்வின் ஜிம்மில் பயிற்சியில் இருந்த போது, அமிர் சோக்ரி கத்தியால் குத்த வந்ததாக தெரிகிறது. அவரிடத்தில் இருந்து தப்பி தெருவுக்கு வந்த போது, அமிர் சோக்ரி விரட்டி வந்துள்ளார். அப்போது, ஆர்வின் , அமிர் கையில் வைத்திருந்த கத்தியை பறித்து குத்தியதில் அமிர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதையடுத்து, ஆர்வின் அமீரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அமீர் இறந்து போனார்.
இது தொடர்பான வழக்கு ஈரான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஆர்வினின் குடும்பத்தினர் தங்கள் மகனை காப்பாற்ற சட்டரீதியாக போராடி வந்தனர். மேலும், கொல்லப்பட்ட அமீரின் குடும்பத்துக்கு இஸ்லாமிய சட்டப்படி blood money கொடுக்க முன்வந்தனர்.
ஆனால், ஈரானிய அரசு கொடுத்த நெருக்கடியால் ஆர்வின் குடும்பத்தினர் பணத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். ஈரானிய சட்டப்படி கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் மட்டுமே கொலைக்குற்றவாளி மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால், பணத்தை ஏற்றுக் கொள்ளாததால், ஆர்வின் நேற்று தூக்கிலிடப்பட்டார்.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரானில் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு 1 லட்சம் யூதர்கள் வசித்தனர். 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 10 ஆயிரம் யூதர்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
குறைந்தது தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் : சாதனை படைப்பாரா கமலா…. கணிப்பை மாற்றுவாரா டிரம்ப்?