ஈரான் நாட்டில் 5000 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஈவு இரக்கமின்றி கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று ஈரான் நாட்டு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு, ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய நிலையில், அதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவர் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள பெண்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் போலீஸாருக்கும் பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

பள்ளி மாணவிகளுக்கு விஷம்
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு, அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5,000 பள்ளி மாணவிகளுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்த அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஈரானில் மொத்தம் உள்ள 31 மாகாணங்களில் சுமார் 25 மாகாணங்களில் நடந்துள்ளதாக கூறப்பட்டது.
மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட செய்திகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அரசியல் தலைவர்கள், மற்றும் சமூகநல ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை
பின்னர் இதில் கவனம் செலுத்திய ஈரான் அரசு, இதுகுறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழு நேற்று வெளியிட்ட செய்தியில், ’ஷியா முஸ்லிம்களின் புனித நகரமான கோமில் தொடங்கப்பட்டு 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று உறுதி செய்துள்ளது.
ஈரானின் 230 பள்ளிகளைச் சேர்ந்த 5,000 மாணவிகளுக்கு விஷம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உண்மை கண்டறியும் குழு உறுப்பினர் முகமது ஹாசன் அசாபாரி உறுதி செய்தார்.
இதையடுத்து, ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா அலி காமேனேனி, இந்தச் சம்பவத்திற்கு தனது கடும் கண்டனம் தெரிவித்து, ”இது ஒருபோதும் மன்னிக்கவே முடியாத குற்றம். இந்த விவகாரத்தில் ஈவு, இரக்கமின்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

6 மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் கைது
அதன்படி ஈரான் அதிகாரிகள் முதன்முதலாக நேற்று முதல் இந்த விவகாரத்தில் சந்தேகப்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
முதல்கட்டமாக ஒரு மாணவரின் பெற்றோர் உட்பட ஆறு மாகாணங்களில் விஷத்தை உற்பத்தி செய்ததாக சந்தேகிக்கப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாட்டில் உள்ள குசெஸ்தான், மேற்கு அஜர்பைஜான், ஃபார்ஸ், கெர்மன்ஷா, கொராசன் மற்றும் அல்போர்ஸ் என்ற 6 மாகாணங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சையில் மாணவிகள்
இதற்கிடையே எரிச்சல், குமட்டல், தலைசுற்றல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களிடம் விஷத்தின் வீரியம் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளனர்.

பெண்கல்வியை தடுக்க சதி?
பள்ளி மாணவிகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த விஷத்தாக்குதல் ஈரான் நாடு முழுவதும் கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்கள் கல்வி பெறுவதை தடுக்கும் வகையில் இது நடைபெற்று இருக்கலாம் என்று பலரும் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே தற்போது கைது நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் இந்த சம்பவம் குறித்த முழுவிவரமும் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா