Yoga Day : “யோகாவால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது” – மோடி

இந்தியா

10வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்த முன்மொழிவைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐநா அறிவித்து, 2015ம் ஆண்டு முதல் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இன்று (ஜூன் 21) 10வது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கரையில் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி யோகா பயிற்சிகளை செய்தார்.

இந்த நிகழ்வு காலை 6.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “சுய மற்றும் சமூகத்திற்கான யோகா” என்பதாகும்.

பிரதமர் மோடி பேச்சு

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “யோகாவின் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ஆற்றலை நம்மால் உணர முடிகிறது. சர்வதேச யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகாசனம் செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச யோகா தினம் ஒரு வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014ஆம் ஆண்டு நான் சர்வதேச யோகா தினத்தை ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தேன். இதை 177 நாடுகள் ஆதரித்தன.

கடந்த கால நிகழ்வுகளை சுமக்காமல் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் வாழ யோக உதவுகிறது. இந்த ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த 101 வயதான பெண் யோகா ஆசிரியைக்கு பதமஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அவர் இந்தியாவிற்கு வரவில்லை. ஆனால், யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறார் அந்த பெண்மணி.

இன்று உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் யோகா செய்யப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளின் யோகா குறித்த கருத்து மக்களிடையே மாறியுள்ளது. இந்தியாவில் ரிஷிகேஷில் இருந்தும் மற்றும் காசி முதல் கேரளா வரை யோகா செய்பவர்கள் அதிகரித்துள்ளனர். இதனால், இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனெனில், அவர்கள் இந்தியாவில் உண்மையான யோகாவை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

இதனால், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகி உள்ளது” என பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகா நிகழ்வுகளில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, நிதின் கட்கரி, பியூஸ் கோயல், ஜே.பி.நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் சேகாவட் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கேரளாவில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்தார். அங்கு, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market: வார இறுதி நாள்… எந்த பங்குகள் உயரும்?

கோலி சாதனையை சமன் செய்து வரலாறு படைத்த சூர்யகுமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *