இந்தூர் கோயில் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.
ராம நவமியை முன்னிட்டு நேற்று (மார்ச் 30) மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பட்டேல் நகர் பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது.
அப்போது கோவிலில் இருந்த பழைமையான கிணற்றின் மேற்கூரை மீது அமர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் அதிகளவில் கிணற்றின் மேற்கூரை மீது அமர்ந்ததால் அழுத்தம் தாங்காமல் கிணறு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 50அடி ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று 14பேர் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் இளையராஜா கூறும்போது, “நேற்று மதியம் 12.30மணி முதல் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காக தீயணைப்புதுறை மற்றும் பேரிடர் மீட்புபடையினர் 18மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றில் விழுந்தவர்களை தேடி வருகின்றனர். கிணற்றில் விழுந்து இதுவரை 35பேர் உயிரிழந்துள்ளனர். 14பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு நபர்கள் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கிணறு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5லட்சமும், காயடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, “இந்தூரில் நடந்த விபத்து மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை தொடர்புகொண்டு விபத்து குறித்து தகவல் கேட்டறிந்தேன். மாநில அரசு மீட்பு பணியில் விரைந்து செயல்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பத்து தல: ரசிகர்களுக்குப் பத்தல…விமர்சனம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!