2100 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 41 கோடி குறைந்து 100.3 கோடியாக இருக்கும் என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகையையும் தாண்டி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் தெரிவித்தது. அதன் தரவுகளின் படி, தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 476 பேர் வாழ்ந்து வருகின்றனர். இப்பொழுதே இப்படி இருக்கிறது என்றால் அடுத்த 100 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை மிகப்பெரும் எண்ணிக்கையில் இருக்கும் என்று பலரும் கணித்தனர். ஆனால் சமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை அத்தனை கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் புதிய தகவலை கொடுத்துள்ளது.

இந்திய மக்கள்தொகை அடர்த்தி – கடும் வீழ்ச்சி!
அதன்படி, தற்போது இந்திய மக்கள் தொகை 141 கோடியாக உள்ள நிலையில், அடுத்த 78 ஆண்டுகளில் அதாவது 2100 ஆம் ஆண்டில் 41 கோடி குறைந்து 100.3 கோடியாக இருக்கும் என ஸ்டான்போர்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தியின் விரைவான வீழ்ச்சி உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தி 2100 ஆம் ஆண்டுக்குள் ஒரு கிமீ சதுர மீட்டருக்கு 335 நபர்களாகக் குறைய வாய்ப்புள்ளது என்றும், இந்த வீழ்ச்சி உலகம் முழுவதும் கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஸ்டான்போர்ட் ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஒப்பீட்டளவில், உலகின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கி.மீ.க்கு 61 நபர்களில் இருந்து 54 நபர்கள் என குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருவுறுதல் விகிதம் குறைவு!
இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் அதன் அடர்த்தி குறைவு போன்றவை குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கருவுறுதல் விகிதம் குறைவது மக்கள் தொகை மற்றும் அதன் அடர்த்தி வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் இந்தியாவில் கருவுறுதல் விகிதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.76 ஆக உள்ளது. இது 2032 இல் 1.39 ஆகவும், 2052 இல் 1.28 ஆகவும், 2082 இல் 1.2 ஆகவும், 2100 இல் 1.19 ஆகவும் குறையும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

2100ல் சீனா மக்கள் தொகை எவ்வளவு?
மக்கள்தொகை குறைவானது, இந்தியா மட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா போன்ற ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் இதுபோன்ற ஒரு கூர்மையான, கீழ்நோக்கிய போக்குடைய சூழ்நிலையே நிலவும். குறிப்பாக, 2100 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை வியக்கத்தக்க வகையில் 93.2 கோடியாக குறைந்து வெறும் 49.4 கோடியாக குறையும் என்றும் அறிக்கை கூறுகிறது. இந்தியா மற்றும் சீனாவின் மக்கள்தொகை இந்த நேரத்தில் ஒரே மாதிரியாக இருப்பது போல் தோன்றினாலும் அவற்றின் அடர்த்தியில் பெரும் வேறுபாடு உள்ளது. இந்தியாவில் தற்போது ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் சராசரியாக 476 பேர் வசிக்கும் நிலையில், சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 148 பேர் மட்டுமே உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை உயரும்!
நாடுகள் வளம் பெறும்போது, கருவுறுதல் விகிதங்கள் நிலையான வளர்ச்சியில் இருக்காது என்று ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 2100ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா மக்கள் தொகையில் சரிவைச் சந்தித்தாலும், ஆப்பிரிக்கா நாடுகளான காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் மக்கள்தொகை அடிப்படையில் ஒரு மேல்நோக்கிய வளர்ச்சி காணப்படும். அதேவேளையில் அங்கு அதிகளவிலான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா