இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. சர்வதேசப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஜூன் 2023இல் சரக்கு ஏற்றுமதி 22.02 சதவிகிதம் சரிந்து 32.97 டாலர்கள், அதாவது ரூ.2.62 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த 2022இல் இதே காலகட்டத்தில் ரூ.3.44 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி நடைபெற்று இருந்தது.
மேலும் ஜூன் மாதத்தில் சரக்கு இறக்குமதியும் 17.5 சதவிகிதம் சரிந்து இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரவுகளின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.1.64 லட்சம் கோடியாக இருந்தது.
இது கடந்த ஆண்டு ஜூன் மற்றும் மே மாதங்களில் காணப்பட்ட அளவில் இருந்து 8.8 சதவிகிதம் குறைவாகும். எண்ணெய் மற்றும் தங்கம் அல்லாத பொருட்கள் இறக்குமதி கடந்த மே மாதத்தில் 1.7 சதவிகிதம் உயர்ந்த பிறகு ஜூனில் 14.5 சதவிகிதம் சரிந்துள்ளது. தங்கம் இறக்குமதி 82.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகளில் இந்தியப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நாட்டில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதும் சரக்கு ஏற்றுமதி குறைவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், “பொறியியல் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு இது ஒரு கடினமான நேரம். பெரும்பாலான முக்கிய சந்தைகளில் இருந்து தேவை குறைந்து வருகிறது.
லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா பகுதி மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளைச் சேர்ந்த சந்தைகளைத் தவிர, பெரும்பாலான சந்தைகளில் தேவை குறைந்துள்ளது” என இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவர் அருண் குமார் கரோடியா கூறியுள்ளார்.
தொடர்ந்து சரக்கு ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு சரிந்துவருவதைத் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
கிச்சன் கீர்த்தனா: தயிரா, மோரா… இந்த சீசனுக்கு ஏற்றது எது?
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: முதல்வர் நடவடிக்கை!