அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நேற்று அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 13 மைனர்களும் அடங்கும். இவர்களை, அமெரிக்க அதிகாரிகள் மிக மோசமாக நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, காலில் செயின் போட்டும் கையில் விலங்குடனும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஷ்பூர் பகுதியை சேர்ந்த ஜாஸ்பால் சிங்கும் அமெரிக்காவால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர். இவர், கூறுகையில், ‘விமானத்தில் நகர கூட முடியவில்லை. அந்தளவுக்கு எங்கள் காலில் செயினும் கையில் விலங்கும் போட்டு வைத்திருந்தனர். அமிர்தரசரஸ் வந்திறங்கிய பிறகுதான் செயின் மற்றும் விலங்குகளை அவிழ்த்து விட்டனர்.
விமானத்தில் ஏற்றுவதற்கு முன், 11 நாட்கள் எங்களை அமெரிக்க போலீசார் கஸ்டடியில் வைத்திருந்தனர். என்னை மெக்சிகோ எல்லையில் வைத்து அமெரிக்க போலீசார் பிடித்தனர். அமெரிக்காவுக்கு சட்டரீதியாக அனுப்புவதாக கூறி டிராவல் ஏஜன்சி ஒன்று என்னை ஏமாற்றி விட்டது. அமெரிக்கா செல்ல கடன் வாங்கி 30 லட்சம் வரை கொடுத்தேன். என் கனவுகள் எல்லாம் நொறுங்கி விட்டது’ என்கிறார்.
இதற்கிடையே, இந்தியர்கள் கையில் விலங்கு போட்டு விமானத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. சோசியல் மீடியாவில் இந்த புகைப்படம் வெளியானதையடுத்து, பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், இந்த படம் அமெரிக்காவில் இருந்து கவுதமாலாவுக்கு நாடு கடத்தப்பட்ட மக்கள் தொடர்புடையது என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்தியா திரும்பிய மற்றொரு பஞ்சாபியரான ஹர்விந்தர் சிங் கூறுகையில், ‘கத்தார், பிரேசில் , பெரு, கொலம்பியா, நிகரகுவா வழியாக மெக்சியோ எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். மெக்சிகோவில் காடு , மலை , கடல் வழியாக பயணித்தோம். பனமா காட்டில் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் இறந்து கிடந்ததையும் பார்த்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் நுழையும் இந்த முறையை ‘கழுதை பாதை ‘ என்கிறார்கள். இந்த பாதை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டுமென்றால் மெக்சிகோவில் 18 சிறிய மலைகளை கடக்க வேண்டும். 45 கி.மீ நடக்க வேண்டும். 15 மணி நேரம் படகில் பயணிக்க வேண்டும். பயணத்தின் போது, யாராவது கீழே விழுந்து காயமடைந்தால், அப்படியே போட்டு விட்டு போய் விடுவார்கள்.