ஓட்டுநர் டூ கோடீஸ்வரர்: துபாயில் இந்தியருக்கு அடித்த லாட்டரி!

இந்தியா

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் ஓகுலா துபாயில் நடைபெற்ற லாட்டரி சீட்டு விற்பனையில் 15 மில்லியன் திர்ஹம்ஸ், இந்திய மதிப்பில் ரூ.33 கோடி பரிசு பெற்று தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

துபாயில் நடைபெறும் எமிரேட்ஸ் டிரா மெகா மில்லியன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமிதத்துடன் அஜய் ஓகுலா தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கொண்டாட உள்ளார்.

நேற்று அஜய் ஓகுலா கோடீஸ்வரராக அறிவிக்கப்பட்டாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து தான் இன்னும் வெளிவரவில்லை என்கிறார்.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் அருகே உள்ள ஜக்தியால் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான அஜய் ஓகுலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்றார். அவருடைய தந்தை மறைவாலும், அம்மா மற்றும் சகோதரிகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் குடும்ப சூழல் அவரை துபாய்க்கு தள்ளியது.

துபாயில் உள்ள நகை கடையில் ஓட்டுநராக வேலை செய்து வரும் ஓகுலா 3,200 திர்ஹம்ஸ், இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.72,000 மாத வருமானம் பெற்று வருகிறார். குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழலால் அவர் கூடுதல் நேரம் வேலை செய்து ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வருகிறார்.

லாட்டரியில் பரிசு பெற்றது குறித்து அஜய் ஓகுலா கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழையான குடும்பம். எங்களுக்குச் சொந்தமாக வீடு கூட கிடையாது. இதனால் நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம். லாட்டரியில் வெற்றி பெற்றதை என்னுடைய குடும்பத்தில் சொன்னதை அவர்கள் இன்னும் நம்பவில்லை. அவர்களிடம் இது உண்மை என்று நான் தினமும் கூறி வருகிறேன்.

நான் வெற்றி பெற்றதாக முதலில் மின்னஞ்சல் வந்தபோது, சிறிய அளவிலான பரிசு தொகை தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பரிசு தொகையில் உள்ள பூஜ்ஜியமானது அதிகரித்துக்கொண்டே சென்றதால் அந்த அதிசயத்தைத் தாங்க முடியாமல் துள்ளிக்குதித்தேன்.

என்னுடன் பணிபுரிந்த அலுவலர்களின் அறிவுறுத்துதலால் தான் லாட்டரி சீட்டு வாங்கினேன். முதல்முறையாக இப்போது தான் நான் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி இரண்டு லாட்டரி சீட்டு வாங்கினேன்.

பரிசு பெற்ற தொகையில் எனது குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து அவர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்து வருகிறேன். எனது அம்மா மற்றும் தங்கைக்கு வீடு வாங்க வேண்டும். அவர்கள் இங்கு வந்த பிறகு அதுகுறித்து நாங்கள் விவாதிப்போம்.

தற்போது எனது வேலையில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள உள்ளேன். புதிய கட்டட நிறுவனத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். மேலும் எனது கிராமத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய உள்ளேன்.” என்றார்.

எமிரேட்ஸ் டிரா ஒவ்வொரு வாரமும் இரண்டு லாட்டரி சீட்டு நிகழ்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 9 மணிக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ், இந்திய மதிப்பில் ரூ.33 கோடி பரிசுடன் கூடிய லாட்டரி சீட்டு விற்பனை நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லாட்டரி சீட்டு நிகழ்வில் 10 ஆயிரம் திர்ஹம்ஸ், முதல் 77 ஆயிரம் திர்ஹம்ஸ், இந்திய மதிப்பில் ரூ.2.25 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை பரிசுத்தொகை அறிவிக்கப்படும். நாளை டிசம்பர் 25-ஆம் மெகா பரிசு ஆஃபராக 160 மில்லியன் திர்ஹம்ஸ், இந்திய மதிப்பில் ரூ.360 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.

வெற்றியாளர்கள் தங்களது பரிசுத்தொகையைத் தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

எமிரேட்ஸ் டிரா நிர்வாக பங்குதாரர் முகமது அலவாதி கூறும்போது, “எமிரேட்ஸ் டிரா லாட்டரி சீட்டு விற்பனையானது பரிசு மற்றும் வெற்றியாளர்களைப் பற்றியானது மட்டுமல்ல. மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நாங்கள் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். அஜய் ஓகுலாவின் வெற்றியால் எங்களது குழு முழுவதும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வெற்றி அவரது வாழ்க்கை மற்றும் குடும்பத்தை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

செல்வம்

சபரிமலை தரிசனம்: 50 அடி பள்ளத்தில் விழுந்து 8 பக்தர்கள் பலி

நடிகர் ‘மாயி’ சுந்தர் மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *