கடந்த 2013 ஆம் ஆண்டு உலகில் 80 நாடுகளில் நடத்திய ஆய்வில் , மிகவும் இனரீதியாக சகிப்புத்தன்மையுள்ள நாடுகளில் கனடா முன்னிலையில் இருந்தது .
வெள்ளை இனத்தை சேர்ந்த பெரும்பாலான கனடியர்கள் மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், சமீப காலமாக கனடாவில் சகிப்புத்தன்மை வெகுவாக குறைந்து வருவதாக தெரிகிறது. அதற்கேற்ற வகையில், அந்த நாட்டில் இந்தியர்கள், ஆப்ரிக்கர்களுக்கு எதிராக பல இனவாத வெறுப்பு பேச்சுக்களை காண முடிகிறது.
தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அண்ணாமலை ஒன்டாரியோ வாட்டர்லு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சாலையில் நடந்து சென்ற கனடிய பெண் ஒருவர் திடீரென அஸ்வினை பார்த்து, மிடில் ஃபிங்கரை உயர்த்தி காட்டி, நீ இந்தியர்தானே உங்கள் நாட்டுக்கு போ… இங்கே எங்கு பார்த்தாலும் இந்தியர்களும் ஆப்ரிக்கர்களும்தான் உள்ளீர்கள். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அஸ்வின் அண்ணாமலை, பிரஞ்சு மொழியில் நான் கனடியன் என்று பதிலளித்தார். ஆங்கிலத்தில் பேசாததற்காக அந்த பெண் அஸ்வினை குறை கூறினார். அதற்கு, பிரெஞ்சு கனடாவின் அலுவலக மொழி … உங்களால் என்னை போல பிரெஞ்சு மொழியில் பேசமுடியுமா? என்று அந்த பெண்ணை சீண்டினார்.
The once welcoming community of Kitchener-Waterloo has seen a disturbing rise in hate, particularly against people of colour. Here’s a personal account of what I experienced today: A random woman gave me the finger & spewed hate while I was out for a walk at Erb/Avondale ???? 1/n pic.twitter.com/TxvXeXW3Yd
— Ashwin Annamalai (@ignorantsapient) October 15, 2024
தொடர்ந்து , உனது பெற்றோர், உனது பாட்டி இந்தியாவை சேர்ந்தவர்கள்தானே என்று பதிலுக்கு கோபத்துடன் அந்த பெண் கேட்டார். இதையடுத்து, அஸ்வின் அண்ணாமலை சற்று கோபத்துடன், அப்படி குடியேறுவது ஒன்றும் குற்றமில்லையே… இனவெறியுடன் இப்படி நடப்பதும் மிடில் பிங்கரை உயர்த்தி காட்டுவதுதான் கனடிய சட்டப்படி கைதுக்குரிய குற்றம் என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து, சற்று பயந்து போன அந்த பெண் தன் வீட்டை நோக்கி நடையை கட்டி விட்டார்.
இது தொடர்பான வீடியோவை கடந்த 16ஆம் தேதி அஸ்வின் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்