இந்தியாவில் மெட்ரோ ரயில் பாதை நீளம் ஆயிரம் கிலோ மீட்டரை எட்டியுள்ளது.
இந்தியாவில் பழமையான மெட்ரோ பாதை கொல்கத்தாவில் உள்ளது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி இந்த பாதை திறக்கப்பட்டது. கொல்கத்தாவில் எஸ்பிளனேடு பகுதியில் இருந்து போவானிபூர் வரை 3.4 கி.மீ தொலைவுக்கு இந்த பாதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, கொல்கத்தாவில் 60 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைந்துள்ளது. இந்தியாவில் இந்த மெட்ரோ மட்டுமே இந்தியன் ரயில்வேயால் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவுக்கு பிறகு, நாட்டின் பல நகரங்களில் மெட்ரோ பாதை அமைக்கப்பட்டது. டெல்லியில் 2002 முதல் மெட்ரோ அமைக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் மெட்ரோ ரயில் பாதையின் நீளம் 248 கி.மீட்டராக இருந்தது. தற்போது, இந்தியாவின் நான்கு பெருநகரங்கள் உள்பட 17 நகரங்களில் மெட்ரோ பாதை உள்ளது. இவற்றின் மொத்த நீளம் 1,000 கிலோ மீட்டரை கடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘இது குறிப்பிடத்தக்க சாதனை. இன்னும் 1000 கிலோ மீட்டருக்கு பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே அமைந்துள்ள நகரங்களில் மெட்ரோ பாதை விரிவுபடுத்தப்படுகிறது. 30 புதிய மெட்ரோ பாதைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தற்போது, டெல்லி நகரில் மட்டும் 65 கி.மீ தொலைவுக்கு 4வது மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவுற்றால் டெல்லியில் மட்டும் 450 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைந்திருக்கும். இந்தியாவில் பெரிய மற்றும் பிசியான மெட்ரோ பாதை இதுதான்.
மும்பையில் புதியதாக 337 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் 137 கி.மீ தொலைவுக்கும் புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களுருவில் 175 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ நீட்டிக்கப்டவுள்ளது. சென்னையில் 54 கி.மீ தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 50 முதல் 60 நகரங்களில் மெட்ரோ ரயில் ஓடிக் கொண்டிருக்கலாம்.
உலகில் சீனாவில் 10,187 கி.மீ தொலைவுக்கு சீனாவில் மெட்ரோ பாதை அமைந்துள்ளது. அமெரிக்காவில் 1,389 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ உள்ளது. இந்தியாவில் தற்போது பணிகள் நடந்து வரும் மெட்ரோ பாதைகள் நிறைவுற்றாலே நாம் அமெரிக்காவை முந்தி விடுவோம்.
ஜப்பானில் 897 கி.மீ தொலைவுக்கும் தென்கொரியாவில் 753 கி.மீ தொலைவுக்கும் மெட்ரோ பாதைகள் உள்ளன.