அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களில் ஹரியானாவை சேர்ந்த இளைஞர் அக்ஷய் என்ற இளைஞரும் ஒருவர். இவர், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா செல்ல ஒர்க் விசா கேட்டு டிராவல் ஏஜென்சி ஒன்றை அணுகியுள்ளார். சட்டப்பூர்வமாக அமெரிக்கா செல்ல ரூ. 35 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். அக்ஷயும் பணம் தர ஒப்புக் கொண்டார்.
ஜூலை 18 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்காக துபாய் அனுப்பப்பட்டுள்ளார். துபாயில் ஒரு மாத காலம் தங்க வைத்துள்ளனர். ஆகஸ்ட் 23 ஆம் தேதி 30 லட்சம் கொடுத்தால் அடுத்த 5 நாட்களுக்குள் அமெரிக்கா சென்று விடலாம் என்று அக்ஷயிடத்தில் கூறியதையடுத்து, அவரின் குடும்பத்தினர் 30 லட்சத்தை டிராவல் ஏஜென்சியிடத்தில் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, துபாயில் இருந்து அக்ஷய் சூரினம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கே 20 நாட்கள் இருந்துள்ளார். அக் ஷையை சுரினமில் வைத்திருப்பது ஏன்? என்று எனது குடும்பத்தினர் கேட்ட போது, அமெரிக்கா விசா பெற்று விமானத்தில் அனுப்பி விட்டதாக கூறி, நவம்பர் 28 ஆம் தேதி மேலும் 20 லட்சம் வாங்கியுள்ளனர்.
ஆனால், சுரிநாமில் இருந்து அக்ஷயை பஸ் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்ப மெக்சிகோ எல்லைக்கு கொண்டு சென்றுள்ளனர். மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 5வது நிமிடமே அமெரிக்க பேட்ரோலிங் போலீசார் அக்ஷ்யை பிடித்து விட்டனர். பின்னர், அவரை முகாமில் அடைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து, பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தியாவுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது, நாடு திரும்பிய அக்ஷய் அந்த டிராவல் ஏஜன்சியை சேர்ந்த 3 பேர் மீது ஹிசார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் குடியேற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.