இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்று பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே காசா என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கூறுகிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இவ்வமைப்பு தங்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 7) காலை முதல் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்து வருகிறது. இதுவரை சுமார் 7000 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த எண்ணிக்கையை இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ரேலுக்குள் பாரசூட் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க, போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம், ‘ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்’ என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை தற்போது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சமூக லைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாம் போரில் இருக்கிறோம்… கண்டிப்பாக வெல்வோம்” என்று கூறியுள்ளார்.
Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
இந்தசூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில். “இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருக்கின்றது. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம்”என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…