கறுப்புப் பண விவகாரம் இனி இந்தியாவுக்கு பிரச்சினையாக இருக்காது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கறுப்புப் பண விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் ரால் ஹெக்னர் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணத்தை பதுக்குவதற்கு ஏற்ற இடமாக சுவிஸ் வங்கிகள் கருதப்படுகின்றன.
கடந்த காலங்களில் ஏராளமான இந்திய தொழிலதிபர்கள், பெரு முதலாளிகள், அரசியல் தலைவர்கள் சுவிஸ் வங்கிகளில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பதுக்கியது கண்டறியப்பட்டது.
இதை தவிர்க்கும் நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே வங்கித் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம், யார் யார் எவ்வளவு தொகையை சுவிஸ் வங்கிகளில் போடுகிறார்கள் என்ற விவரம் இந்திய அரசுக்கு கிடைக்கும்.
இருந்தபோதும், கடந்த 2021 இல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை பல மடங்கு உயர்ந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர்,
”இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கறுப்புப் பண விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் வங்கி தொடர்பான ஆவணங்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்கின்றன.
இதுவரை இரு நாடுகளும் பல்வேறு முறை தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. எனவே, கறுப்புப் பண விவகாரம் இந்தியாவுக்கு இனி பிரச்சினையாக இருக்காது.
இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு ஒரு சிறிய அளவிலான சந்தேகம்கூட இதுவரை எழவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகள் தற்போது நடைபெறுவதை நான் பார்க்கிறேன்.
நீடித்த நிலையான வளர்ச்சி மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்; அதையே சுவிட்சர்லாந்து அரசும் கருதுகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய நிதி ஒதுக்குவது தொடர்பாக நாங்கள் பேசுவதில்லை.
பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி வர்த்தகத்தை, காப்பீடு வர்த்தகத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் கிடைக்கும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதிக்கிறோம். எனவே, இந்தியர்கள் முதலீடுகளை செய்வதற்கு சுவிட்சர்லாந்தில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
-ராஜ்
உயிரற்ற கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் எதற்கு: அஜித், விஜய்க்கு கடிதம்!
கிச்சன் கீர்த்தனா : சாமை பொங்கல்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!