உலக பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு பின்னால் சரிந்து 107 வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உலகப் பட்டினிக் குறியீடு(GHI) வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த பட்டியலை அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் என்ற நிறுவனமும் இணைந்து வெளியிட்டு வருகின்றன.
பின்னோக்கி செல்லும் இந்தியா!
அதன்படி 2022ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.
2021ம் ஆண்டு உலக பட்டினி குறியீட்டில் 101 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 6 இடங்கள் சரிந்து 107வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
இது அண்டை நாடுகளான பாகிஸ்தான் (99), வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு (64) பின்னால் உள்ளது.
தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட மோசமான இடத்தில் (109) இருக்கிறது.
மேலும் சீனா, துருக்கி மற்றும் குவைத் உட்பட பதினேழு நாடுகள் GHI ஐ விட குறைவான மதிப்பெண்களுடன் பட்டினி இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ப.சிதம்பரம் கேள்வி!
இதனையடுத்து காங்கிரஸ் எம்பியும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் உலக பட்டினி குறியீடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், ”பிரதமர் எப்போது குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் வீண்விரயம் போன்ற உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண போகிறார்?
இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 107 ஆக உள்ளது. 121 நாடுகளில் 107 என்பது கிட்டத்தட்ட கடைசி இடம் தானே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2014ல் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ந்து இந்தியா இந்தக் குறியீட்டில் மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்துத்துவா, ஹிந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பசிக்கு மருந்தல்ல என்பதை மோடி உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
GHI 2013 – 2022 ஒப்பீடு!
அதே வேளையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இந்தியா கடந்த 2013ம் ஆண்டு 120 நாடுகள் கொண்ட பட்டினி குறியீட்டில் 63வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2013ம் ஆண்டு உலக பட்டினி குறியீட்டில் 21.3 புள்ளிகள் பெற்றிருந்த இந்தியா, நடப்பாண்டில் 29.1 புள்ளிகளுடன் பின் தள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் பட்டினியின் அளவை “தீவிரமானது” என்று ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகளாவிய பசி குறியீட்டின் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
பட்டியல் எப்படி கணக்கீடப்படுகிறது?
உலக பட்டினி குறியீடு (GHI) மதிப்பெண் நான்கு 4 முக்கிய காரணிகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.
1.ஊட்டச்சத்து குறைபாடு (ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை)
2. குழந்தைகளை வீணாக்குதல் (5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதிபலிக்கும்)
3.குழந்தை வளர்ச்சி குன்றியது (5 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கேற்ற உடல் எடை மற்றும் உயரம் குறைபாட்டை பிரதிபலிக்கும்)
4.குழந்தை இறப்பு (ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம்).
அதன்படி உலக பட்டினி குறியீடு பட்டியலை ஐநாவில் உள்ள இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் அதிகாரப்பூர்வமாக வழங்கிய தரவுகளைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடு அளவிடப்படுகிறது என்று வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் கூறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
1000 கி.மீ கடந்த ராகுல்: சுவாரஸ்ய நிகழ்வுகள்!
ஆய்வை துருப்பு சீட்டாக பயன்படுத்துகிறது பாஜக: கே.பி. முனுசாமி குற்றச்சாட்டு
மோடி ஆட்சி மோசமான ஆட்சி என்பதை புள்ளி விபரம் சொல்லுது, பிஜேபி க்கு ஒரே ஆயுதம் “மத அரசியல் “பசிக்கு மதம் தீர்வு ஆகாது