இந்தியா- சிங்கப்பூர்: நாளை முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை!

Published On:

| By Aara

இந்தியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான நிகழ்நேர பணப்பரிமாற்ற முறை இணைப்பு பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.  இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்கள், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவர்கள் என இரு தரப்பினருக்கும்  பணப் பரிமாற்றத்திற்கு  இந்த முறை உதவிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பிரதமர் அலுவலமம் இன்று (பிப்ரவரி 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  “பிரதமர்  நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர்  லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை தாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவை  பிப்ரவரி 21, 2023 காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்  சக்தி காந்ததாஸ் மற்றும் சிங்கப்பூர், நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்  ரவி மேனன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

பொருளாதாரத்துடன் கூடிய தொழில்நுட்பப் புத்தாக்க நடவடிக்கைகள் முன்னேறிய நாடுகள் மத்தியில் இந்தியாவும் மிக வேகமாக வளர்ச்சிப் பெற்று வருகிறது. பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு உலக அளவிலான பங்கேற்பை உறுதி செய்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அம்சமே, ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையின்  பயன்பாடுகளை இந்தியாவோடு வரையறுத்துக் கொள்ளாமல் மற்ற நாடுகளும் பெறவேண்டும் என்பதாகும்.

 இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளை இணைப்பதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேகமாகவும், சிக்கனமாகவும் எல்லைதாண்டிய பணப் பரிவர்த்தனைகளை செய்யமுடியும்.  மேலும், சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோர் உடனடியாக குறைந்த செலவில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேந்தன்

பழனிசாமி பெயரை கூட சொல்ல விரும்பவில்லை: ஓ பன்னீர்செல்வம்

ட்விட்டரை பின்பற்றும் ஃபேஸ்புக்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel