துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,300ஆக அதிகரித்துள்ளது. இத்துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2மீட்புக்குழுக்களை துருக்கிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
துருக்கி- சிரியா எல்லையில் உள்ள காசியண்டெப் நகர் அருகே 17.9கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று அதிகாலை 04:17மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,300ஐகடந்துள்ள நிலையில் மற்றும் 2500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கி அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் துருக்கியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதமர் மோடி தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
அவர், “துருக்கியில் ஏற்பட்ட அபாயகரமான நிகழ்வை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதைவிட அதிகமாக பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. துருக்கிக்கு அருகில் உள்ள நாடுகள் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலநடுக்கத்தில் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இம்மக்களுக்கு 140கோடி இந்தியர்களும் உறுதுணையாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து துருக்கிக்கு மீட்புக்குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்பநாய் படை மற்றும் தேவையான உபகரணங்களுடன் கூட 100பணியாளர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டு குழுக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக துருக்கிக்கு செல்ல உள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
துருக்கி நிலநடுக்கம் : அமெரிக்கா விடுத்த பயங்கர எச்சரிக்கை!
என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான்: ஜெயவர்தனே அதிரடி