எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜூவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தை நேற்று டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிறைவேற்றினார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன், தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
அவரது நடவடிக்கைகள் நாடு முழுவதும் நேற்று முக்கிய பேசு பொருளாக அமைந்தது.
இந்நிலையில், நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜூவ் சந்திர சேகர்,
ட்விட்டர் நிறுவனம் இந்திய சட்டவிதிகளுக்கு இணங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது,
“கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர சீக்கிய அரசை ஆதரிக்கும் ட்விட்டர் கணக்குகள்,
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல் பரப்பிய கணக்குகள்,
கோவிட் 19 பாதிப்பை மத்திய அரசு கையாண்டதை விமர்சித்த கணக்குகளை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

ட்விட்டர் நிறுவனத்தை யார் வைத்திருந்தாலும், மத்திய அரசின் சட்டங்களும் விதிகளும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். எனவே இந்திய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு ட்விட்டர் நிறுவனம் இணங்க வேண்டும்.
இந்தியாவின் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் பல மாதங்கள் ஆலோசனைக்கு பிறகு இன்று வெளியிடப்படுகிறது.
அதன்படி, இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட வேண்டும் “என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜூவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.
செல்வம்