இந்தியா குறித்து இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முன்னோடி மற்றும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ். இதன் நிறுவனராய் இருப்பவர், நாராயண மூர்த்தி.
இவர், ஆந்திர மாநிலம், ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
“வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி தேவை இருக்கிறது, என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.
நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ, அதுதான் நிஜம். இந்தியா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல் மற்றும் மின்சாரம் இல்லாததுதான்.
அதே நேரத்தில் சிங்கப்பூர் என்றால் சுத்தமான சாலை, நல்ல சுற்றுச்சூழல், தடையற்ற மின்சாரம்தான். ஆகவே உங்களுடைய பொறுப்பு அத்தகைய நல்ல நிலையை உருவாக்குவதாகத்தான் இருக்க வேண்டும்.
இளம் தலைமுறையினர், சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முனைய வேண்டும். சுயநலத்தைவிட, நாட்டு மக்கள், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் குழந்தைகள் யாரும் தற்போது அதன் நிர்வாக பொறுப்பில் இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது” என கூறினார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி, இன்போசிஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாராயணமூர்த்தி, ”நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில், நிறுவனத்தை உருவாக்கியவர்களின் வாரிசுகள், குடும்ப உறுப்பினர்களை விலக்கி வைக்கும் கொள்கை முடிவு தவறானது” எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
அலகுமலை ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
அண்ணாமலை வாட்ச்: உண்மையிலேயே ரஃபேல் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டதா?