இணைய சேவையை முடக்கியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பது சமீபத்தில் வெளியான ஆய்வு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி இந்தியாவை டிஜிட்டல் இந்தியா என்று கூறிவருகிறார். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய இணையத்தை முடக்குவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இணைய பயன்பாடு மனிதர்களின் அடிப்படை உரிமை என ஐக்கிய நாடுகளின் சபை கூறுகிறது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்ட போது ஐநா கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நியூயார்க்கை தளமாகக் கொண்ட டிஜிட்டல் உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான AccessNow வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதிக இணைய முடக்கம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என கூறுகிறது.
மோதல்கள், வன்முறை சம்பவங்கள், தேர்தல் நேரம் மற்றும் தேர்வு சமயங்களில் கூட இணைய சேவை முடக்கப்படுவதாவும், இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 84 முறை இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த 84 முறையில் 49 முறை ஜம்மு காஷ்மீரில் மட்டும் முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்து 16 முறை காஷ்மீரில் இணைய சேவை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2016 முதல் 2022 வரையிலான தரவுகள்!
2016ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 58 சதவிகிதத்துடன் இந்தியா இணைய முடக்கத்தில் முதலிடத்தில் இருக்கிறது.
2016ல் 25 நாடுகளில் மொத்தம் 75 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதில் 30 முறை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
2017ல் 19 நாடுகளில் 106 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதில் 69 முறை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
2018ல் 26 நாடுகளில் 196 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில், 134 முறை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
2019ல் 33 நாடுகளில் 213 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில், 121 முறை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
2020ல் 29 நாடுகளில் 150 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில், இந்தியாவில் 109 முறை முடக்கப்பட்டுள்ளது.
2021ல் 34 நாடுகளில் 184 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில் இந்தியாவில் 107 முறை முடக்கப்பட்டுள்ளது.
2021ல் 35 நாடுகளில் 187 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில் இந்தியாவில் 84 முறை முடக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகள்
2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது வன்முறை நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க மே 23, 2018 அன்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது.
2019ல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவை 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கில் காலவரையறையின்றி இணைய சேவை முடக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பின்னர் ஜனவரி 18ஆம் தேதி , அதாவது ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு இணைய சேவை வழங்கப்பட்டது.
2019ல் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது கும்பலாக கூடுவதை தடுக்க டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய டெல்லி சுற்றுவட்டார எல்லை பகுதிகளான சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லை பகுதிகளில் 2021 ஜனவரியில் இணைய சேவை முடக்கப்பட்டது.
இதுபோன்று மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான நேரங்களில் அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது.
இரண்டாம் இடத்தில் உக்ரைன்!
2022ல் முதல் ரஷ்யா போர் தொடுத்து வரும் உக்ரைன் இணைய முடக்கத்தில் 22/187 என்ற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
ரஷ்ய ராணுவம் குறைந்தது 22 முறை உக்ரைனின் இணைய அணுகலைத் துண்டித்தது. சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டது மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வேண்டுமென்றே அழித்தது என AccessNow ஆய்வு கூறுகிறது.
உக்ரைனை தொடர்ந்து 18 முறை இணைய முடக்கத்துடன் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது.
எனினும் இணைய முடக்கம் என்பது அதிகரிக்கும் பாதுகாப்பின்மை மற்றும் பிற கட்டுப்பாடுகளுடன் தொடர்புடையது என்றாலும், இது மனித உரிமைகள் நிலைமை எவ்வாறு மோசமடைந்து வருகிறது என்பதற்கான ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
எனவே, இணைய முடக்கத்திற்கு பதிலாக சமூக ஊடகங்களில் பரவக்கூடிய வதந்திகளை தொழில்நுட்ப ரீதியாக தடுக்க அரசுகள் முயற்சிப்பது தான் மனித உரிமைகளை பாதுகாப்பதில் சிறப்பானதாக இருக்கும். அதுவே இணையத்தை பயன்படுத்துவோரின் கோரிக்கையாக உள்ளது.
பிரியா
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிறை!
வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி எச்சரிக்கை!