சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் காவேரி!

Published On:

| By Kavi

சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவிரி என பெயர் சூட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

ராணுவ ஆட்சி நடந்து வரும் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் காரணமாக பெரும் கலவரம் மூண்டுள்ளது.

இதன் காரணமாக சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். உள்நாட்டு போரில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உட்பட சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

இந்த உள்நாட்டு போரில் இந்தியா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சூடானில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை மீட்கும் பணிக்கு ‘ஆபரேஷன் காவேரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

https://twitter.com/DrSJaishankar/status/1650455540076560387/

இதுதொடர்பாக ஒன்றிய  வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி திட்டம் தொடங்கிவிட்டது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்தனர். மேலும் பலர் வரவுள்ளனர்.

அவர்களை இந்தியா அழைத்துவர நமது கப்பல்கள் மற்றும் விமானம் தயார் நிலையில் உள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளையும் மீட்போம்” என்று அமைச்சர் ஜெய்சங்கர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜ்

பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக எடுத்தது ஏன்?: மணிரத்னம்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!