விண்வெளித் துறையில் சாதனை… இஸ்ரோ தலைவர் சொல்லும் சீக்ரெட்!

Published On:

| By Selvam

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக இன்று (ஜனவரி 29) விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக 1979-ஆம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்எல்வி 3 ராக்கெட் மூலம் ரோகிணி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதனை தொடர்ந்து பல ராக்கெட்டுகள் விண்ணுக்கு சீறிப்பாய்ந்தது. இதில் சந்திரயான், மங்கல்யான், ஆதித்யா எல் 1 போன்ற திட்டங்களால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்த்தது.

இந்தநிலையில், விண்வெளித்துறையில் சாதனை படைக்கும் வகையில், இன்று காலை 6.23 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப் 15 மூலம் என்விஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

இந்த செயற்கைக்கோளானது தரை, வான், கடல்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை வழங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக நாராயணன் நியமிக்கப்பட்ட பிறகு ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

இதுகுறித்து நாராயணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “விக்ரம் சாராபாய் முதல் முன்னாள் தலைவர் சோமநாத் வரை இந்திய விண்வெளித்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக தான் இன்று நாம் விண்வெளித்துறையில் சாதனை படைத்துள்ளோம்.

2020-ஆம் ஆண்டு வரை இஸ்ரோ செய்ய வேண்டிய பணிகள் குறித்து பிரதமர் மோடி தெளிவான ஒரு தொலைநோக்கு பார்வையை எங்களுக்கு வழங்கியுள்ளார். விண்வெளித்துறை சீர்திருத்தம் என்பது பிரதமர் மோடி சிந்தனையில் உருவானதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share