ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.
ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்த நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.
ஆனால், எந்த நாட்டிடம் இருந்து நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, எங்கள் வர்த்தகம் அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
அது இந்திய அரசு முடிவு செய்யும் விஷயம். மிகக் குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் ஜனவரி மாதம் ஒரு நாளுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது டிசம்பர் மாத இறக்குமதியைவிட 9.2 சதவிகிதம் அதிகமாகும்.
ரஷ்யாவின் மாதாந்திர எண்ணெய் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ராஜ்
போக்கு காட்டிய மக்னா யானை: ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்!