இந்திய விமானப் படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரைச் சேர்ந்த ஷாகித் அலியின் மகளான சானியா மிர்சா, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாடமி 2022ஆம் ஆண்டுக்கான விமானப்படை வீரர்களுக்கான தேர்வை அறிவித்தது. இதில் மொத்தம் 400 இடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், போர் விமானங்களை இயக்கும் பிரிவில் பெண்களுக்காக 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதன்படி, தேர்வு எழுதி அதில் சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். சானியா மிர்சா வரும் 27ஆம் தேதி புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைய இருக்கிறார்.

நாட்டின் முதல் பெண் போர் விமானியான அவ்னி சதுர்வேதிபோல் தாமும் வர வேண்டும் என்று எண்ணிய சானியா மிர்சா, தன் கனவை தந்தையான தொலைக்காட்சிகளை சரிபார்க்கும் தொழிலாளி ஷாகித் அலியிடம் கூறியிருக்கிறார். மகளின் லட்சியத்தை ஷாகித் அலியும் நிறைவேற்றி அவரை இந்திய சரித்திரத்தில் இடம்பெற வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஐசோவர் கிராமத்தில் வசித்து வரும் சானியா மிர்சா, அங்குள்ள பள்ளியிலேயே 10ஆம் வகுப்பு வரை படித்தார். அதன்பிறகு, நகரில் உள்ள பள்ளியில் மேல்நிலை வகுப்பை முடித்தார். 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் கல்லூரி படிப்பை முடித்த அவர், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியில் சேர்ந்து நுழைவுத் தேர்வுக்கு தயாரானார்.
விமானியாக தேர்வு செய்யப்பட்டது குறித்து சானியா மிர்சா, “தாய்மொழி (இந்தி) வழியில் படிக்கும் மாணவர்களும் உறுதியுடன் இருந்தால் வெற்றி பெறலாம். எனது பெற்றோரும், செஞ்சுரியன் டிஃபென்ஸ் அகாடமியும்தான் என்னுடைய வெற்றிக்குக் காரணம். முதல் முயற்சியில் நான் தோல்வியுற்றாலும், இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றேன்” என்றார்.

சானியா குறித்து அவரின் தாய் தபசும் மிர்சா, “எங்கள் மகள் எங்களையும் ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். முதல் போர் விமானி ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியுள்ளார். அவர், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டினார்” என்றார்.
விமானப் படையின் முதல் பெண் விமானியாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவ்னி சதுர்வேதி கடந்த 2018ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். சாதாரண போர் விமானங்களைவிட போர் ரக விமானங்களை இயக்குவது மிகவும் கடினம். அதனை, அவ்னி சதுர்வேதி இயக்கி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்