இலங்கைக்கு உதவி செய்வது கடமை: நிர்மலா சீதாராமன்

இந்தியா

இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு உதவி செய்வது நம்முடைய கடமை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார்.  அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை புரிந்து 200 ஆண்டுகள் ஆனதையொட்டி, மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாற்றை கொண்டாடும் பொருட்டு ‘நாம் 200’ நிகழ்ச்சி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நேற்று (நவம்பர் 2) இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த ‘நாம் 2௦௦’ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மலையக தமிழர்களுக்கு சுமார் 10,000 வீடுகள் கட்டி கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன்  பேசுகையில், ” அண்டை நாடான இலங்கை கடந்தாண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது நாம் சுமார் 33 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதியுதவிகளை அளித்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவி செய்தோம்.

உங்களுடைய வலிகளை எங்களால் ஏற்க முடியாது. ஆனால் நல்ல நண்பன் என்ற முறையில் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை எங்களது கடமையாக கருதுகிறோம்.

மிகச்சிறந்த நண்பன் என்ற முறையில் இலங்கையின் கடன் சீரமைப்பு விவாதங்கள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்கு இந்தியா தன்னுடைய முழுமையான ஆதரவினை வழங்கும்.

ஐ.எம்.எப் (IMF) எனப்படும் சர்வதேச நிதியத்தின் நிதியுதவிகளை இலங்கை பெறுவதற்கு முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது இந்தியா தான்.

இதையடுத்தே சர்வதேச நிதியத்தின் நிதியுதவிகள் கிடைப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. முந்தைய சவால்களில் இருந்து முழுமையாக விடுபட்டு இரு நாடுகளும் வளமுடன் செழிப்பாக இருப்பதற்கு இணைந்து செயல்படுவோம். நம் இரு நாடுகளின் நல்லுறவுக்கு மலையக தமிழர்கள் சிறந்த பாலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

முன்னதாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் அங்குள்ள கோயிலில் வழிபட்டார்.

தொடர்ந்து திரிகோணமலையில் எஸ்.பி.ஐ வங்கியின் கிளை ஒன்றினையும் அவர் திறந்து வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

காற்று மாசால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம்!

மிக கனமழை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்!

ஐஸ்வர்யா ராஜேஷ் – யோகி பாபு கூட்டணியில் புதிய படம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *