உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ள நிலையில் ரூ. 70,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு, நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
முப்படைகளும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எந்த சவாலையும் சந்திக்கத்தக்க அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.
அதற்காக முப்படைகளும் நவீனமயமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அவற்றுக்காக நவீன ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறது.
சமீபத்தில் உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018 – 22 காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2013 – 17 மற்றும் 2018 – 22ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 சதவிகிதம் குறைந்திருந்த போதிலும், இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்துக்கு ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
அதாவது, ரூ. 32,000 கோடி மதிப்பில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், இந்திய ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 9 ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாங்கப்படும் என்று தெரிகிறது.
டெல்லியை வீழ்த்தி குஜராத் ஜெயிண்ட் வெற்றி!
கிச்சன் கீர்த்தனா: கம்பு – பாலக் கீரை வடாகம்
கருப்புக் கொடி… தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில் பயங்கரம்: திருச்சி சிவா பேட்டி பரபரப்பு!