”போரை நிறுத்துங்கள்”: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்… இந்தியா புறக்கணிப்பு!

இந்தியா

காசாவில் நடந்தேறிவரும் இஸ்ரேலின் போர் தாக்குதலை உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வேண்டும் என்று ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கிய போர் 20 நாட்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.

பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசாவை குறிவைத்து வான்வழி ஏவுகணை மற்றும் தரைவழி பீரங்கி தாக்குதல் என கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல். இதனால் காசா நகரத்தின் கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாகி வரும் நிலையில் இதுவரை சுமார் 8,000 பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு சபை கடந்த மூன்று வாரங்களாக தீர்மானங்கள் ஏதும் கொண்டுவர முடியாத நிலையில், தற்போது போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க  ஐநா பொதுச்சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

அப்போது மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அரபு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் மற்றும் ஹமாஸ் குழுவால் கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரும் திருத்தத்தை அமெரிக்கா ஆதரவுடன் கனடா கோரியது.

இதற்கு ஆதரவாக 55 நாடுகளும், எதிராக 88 நாடுகளும் வாக்களித்த நிலையில் 23 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. போதுமான பெரும்பான்மை இல்லாததால், கனடாவின் கோரிக்கை நிறுத்தப்பட்டது.

அதேவேளையில் காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தம் மற்றும் காசாவிற்கு தேவையான உதவிகளை அனுமதிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பிரேசில், வடகொரியா உள்ளிட்ட 120 நாடுகளும், எதிராக அமெரிக்கா, ஆஸ்திரியா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, கனடா, ஈராக், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Image

பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து இஸ்ரேலின் போரை உடனடியாக நிறுத்தும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றப்பட்டது.

உலக நாடுகளின் பிரதிபலிப்பான இந்த தீர்மானத்தின்படி, சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து, பொதுமக்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இதனை இஸ்ரேல் செயல்படுத்துமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:(120)

ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, அன்டோரா, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹாமாஸ், பஹ்ரைன், பங்களாதேஷ், பார்படாஸ், பெலாரஸ், பெல்ஜியம், பெலிஸ், பூட்டான், பொலிவியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, போட்ஸ்வானா, பிரேசில், புருனே, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், சிலி, சீனா, கொலம்பியா, கொமோரோஸ், கோஸ்டாரிகா, கோட் டி ஐவரி, கியூபா, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா), காங்கோ ஜனநாயக குடியரசு, ஜிபூட்டி, டொமினிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எகிப்து, எல் சால்வடார், ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, பிரான்ஸ், காபோன், காம்பியா, கானா, கிரெனடா, கினியா, கினியா-பிசாவ், கயானா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஈரான், அயர்லாந்து, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லெசோதோ, லிபியா, லிச்சென்ஸ்டீன், லக்சம்பர்க், மடகாஸ்கர், மலாவி, மலேசியா, மாலத்தீவுகள், மாலி, மால்டா, மொரிடானியா, மொரிஷியஸ், மெக்சிகோ, மங்கோலியா, மாண்டினீக்ரோ, மொராக்கோ, மொசாம்பிக், மியான்மர், நமீபியா, நேபாளம், நியூசிலாந்து, நிகரகுவா, நைஜர், நைஜீரியா, நார்வே, ஓமன், பாகிஸ்தான், பெரு, போர்ச்சுகல், கத்தார், ரஷ்யா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சவுதி அரேபியா, செனகல், சியரா லியோன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, சாலமன் தீவுகள், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை, சூடான், சுரினாம், சுவிட்சர்லாந்து, சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, கிழக்கு திமோர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, துருக்கி உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தான்சானியா ஐக்கிய குடியரசு, உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன், ஜிம்பாப்வே.

Image

ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள்: (14)

ஆஸ்திரியா,  குரோஷியா, செக்கியா, பிஜி, குவாத்தமாலா,  ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, நவ்ரு, பப்புவா நியூ கினியா, பராகுவே, டோங்கா, அமெரிக்கா.

ஐ.நா தீர்மானத்தில் வாக்களிக்காத நாடுகள்: (45)

அல்பேனியா, ஆஸ்திரேலியா, பல்கேரியா, கபோ வெர்டே, கேமரூன், கனடா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்டோனியா, எத்தியோப்பியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, கிரீஸ், ஹைட்டி, ஐஸ்லாந்து, இந்தியா, ஈராக், இத்தாலி, ஜப்பான், கிரிபதி, லாட்வியா, லிதுவேனியா, மொனாக்கோ, நெதர்லாந்து, வடக்கு மாசிடோனியா, பலாவ், பனாமா, பிலிப்பைன்ஸ், போலந்து, கொரியா குடியரசு (தென் கொரியா), மால்டோவா குடியரசு, ருமேனியா, சான் மரினோ, செர்பியா, ஸ்லோவாக்கியா, தெற்கு சூடான், ஸ்வீடன், துனிசியா, துவாலு, உக்ரைன், யுனைடெட் கிங்டம், உருகுவே, வனுவாட்டு, ஜாம்பியா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னை விமான நிலையத்தில் ஸ்வீட் பாக்ஸ்களுக்கு தடை: சுங்கத்துறை கெடுபிடி!

46 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *