தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன் லைன் ரம்மியை தடை செய்வது பற்றி உறுதியான சட்டம் இயற்ற ஆலோசித்து வருகிறது தமிழக அரசு. ஆனால் உத்திரப்பிரதேசத்திலோ சட்டமன்றத்திலேயே ஆன் லைன் ரம்மி ஆடிக் கொண்டிருக்கிறார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி உள்ளது. மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் (செப்டம்பர் 23) முடிவடைந்தது.
கூட்டத்தொடரில் அலகாபாத் பல்கலைக்கழக கட்டண உயர்வு உள்ளிட்ட சமாஜ்வாடி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பாஜக அரசு நேற்று பதிலளிக்கவில்லை. அதனை தொடர்ந்து சமாஜ்வாடி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை போன்ற முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க தவறிவிட்டதாகக் கூறி, விதான் பவனில் இருந்து கட்சித் தலைமையகத்துக்கு பேரணி நடத்தினர்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட இரண்டு பாஜக எம்.எல்.ஏக்களின் வீடியோவை சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் சபை நடவடிக்கைகளின் போது மொபைலில் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் மற்றொரு பாஜக எம்.எல்.ஏ புகையிலை பயன்படுத்துகிறார்.
இந்த வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி, ”சட்டசபையின் கண்ணியத்தைக் கெடுக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள்! மஹோபாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார், ஜான்சியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ புகையிலை சாப்பிடுகிறார்.
இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் இல்லை, சட்டசபையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர். மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!” என்று பதிவிட்டிருக்கிறார்கள்.
மோனிஷா
சிறையிலிருந்து 75 கைதிகள் விடுதலை!
மதுரை எய்ம்ஸ்! உண்மை நிலை என்ன? மக்கள் நீதி மய்யம் கேள்வி