இந்திய அரசுக்கு வருவாய் இரண்டு முறைகளில் கிடைக்கிறது. ஒன்று வரி வருவாய் இரண்டாவது வரி அல்லாத வருவாய்.
இந்திய அரசு கொடுத்துள்ள கடன்களுக்கு கிடைக்கும் வட்டி, அதன் பங்குகளுக்கு கிடைக்கும் ஈவுத்தொகை, மக்கள் கட்டும் அபராதங்கள், உள்ளிட்டவை வரி அல்லாத வருவாயின் கீழ் வரும்.
வரி வருவாயோ இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒன்று நேரடி வரி வருவாய், மற்றொன்று மறைமுக வரி வருவாய்.
நேரடி வருவாயில் வருமான வரி, கார்ப்பரேட் வரி ( பெரிய நிறுவனங்கள் கட்டும் வரி), சொத்து வரி உள்ளிட்டவை வரும். மறைமுக வரி வருவாயின் கீழ் ஜிஎஸ்டி, சுங்கவரி, கலால் வரி உள்ளிட்டவை அடங்கும்.
அதிகரித்து வரும் வருமான வரி, குறைந்து வரும் கார்ப்பரேட் வரி!
கடந்த 24 ஆண்டுகளின் தரவுகளைப் பார்த்தால், ஒரு விஷயம் நமக்கு நன்றாகப் புலப்படும். அது நாட்டின் மொத்த வரி வருவாயில், அதிரடியாக அதிகரித்து வரும் வருமான வரி பங்கும், குறைந்து வரும் கார்ப்பரேட் வரியின் பங்கும்.
இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இரண்டின் பங்கும் கிட்டத்தட்ட 16 சதவீதம் இருக்கிறது. இதனை தொடர்ந்து வருமான வரியின் பங்கு சீராக 16, 15, 17,18 என உயர்ந்து வந்துள்ளது.

அதுவே கார்ப்பரேட் வரியின் பங்கோ, 20.5(2003-04), 23.8(2004-05), 35.6 (2010-11) என உயர்ந்துள்ளது.
கிடுகிடுவென குறைந்த இடைவேளை
ஆனால் 2014 ஆண்டுக்குப் பின் நாட்டின் மொத்த வரி வருவாயில், வருமான வரியின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வர, கார்ப்பரேட் வரியின் பங்கு மெதுவாக குறைய தொடங்கியுள்ளது.
2014-15 காலகட்டத்தில் 31.6 ஆக இருந்த கார்ப்பரேட் வரி 2017-18 காலகட்டத்தில் 26.3 ஆகக் குறைந்தது. இதே கால இடைவேளையில் வருமான வரி 20.9 இல் இருந்து 21.3 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் இரண்டு வரிகளுக்கும் இடையே இருந்த இடைவேளை மிக வேகமாக குறைந்துள்ளது. அதை மேலே கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இதற்கிடையில் 2019 ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி 30 இல் இருந்து 22 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. மேலும் புதிய நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25இல் இருந்து 15 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
இதனால் 2023-24 பிப்ரவரி நிலவரப்படி நாட்டின் மொத்த வரி வருவாயில் வருமான வரியின் பங்கு 28.1 ஆக உயர்ந்துள்ளது, ஆனால் கார்ப்பரேட் வரியின் பங்கு 26 ஆக இருக்கிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….