உலகிலேயே ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளில் ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் எரிபொருட்களுக்கு மூலதனமாக விளங்கும் கச்சா எண்ணெயை பல ஆண்டுகளாக உறிஞ்சிவிட்ட நிலையில், உலகெங்கிலும் கச்சா எண்ணெய்க்கான மூல ஆதாரங்கள் நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
இது மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால், அதிக புகை கலந்து சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. இதன் விளைவாக பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், பெட்ரோல், டீசல் போன்ற புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக நிலையான எரிபொருள் வழிமுறைக்கு மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வழிமுறையைப் பின்பற்றி, இந்தியாவும் நிலையான எரிபொருள் தேவையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போதைய சூழலில், இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஏதுவாக இரண்டு எரிபொருள் வகைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக எலெக்ட்ரிக் எரிபொருள், இரண்டாவதாக ஹைட்ரஜன் எரிபொருள் ஆகும்.
மின்சார வசதி தாராளமாக இருப்பதால் ஆங்காங்கே சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதேநேரம் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாடு குறித்தும் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகிலேயே முதன்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவையை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது.
இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதால் புவி வெப்பமாகி வருவதை முற்றிலும் தடுக்க முடியும் என்று ஜெர்மனி தெரிவித்திருந்தது.
பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 14 ரயில்களை சுமார் 92 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கி ஜெர்மனிக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில் ஜெர்மனியை அடுத்து இந்தியாவிலும் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘இந்தியன் ரயில்வே, ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை மாற்ற திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு (ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்) முதல் டீசல் ரயில்களுக்கு பதில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும்.
இதையடுத்து ஜெர்மனியை அடுத்து ஹைட்ரஜன் எரிபொருளை வைத்து ரயிலை இயக்கும் நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது.
ஹைட்ரஜனை ரயில் எரிபொருளாக பயன்படுத்துவதால், பூஜ்ய கார்பன் இலக்குகளை அடைய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
-ராஜ்
மது போதையில் பஞ்சாப் முதல்வர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா?
இன்ஸ்டா ஐடிகள் ஹேக் : தடுத்த மாணவருக்கு லட்சக்கணக்கில் பரிசு!