இந்தியாவின் கடன் சில ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமீபத்தில் வெளியிட்டுள்ள IMF அறிக்கையின்படி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அதிக நிதி தேவைப்படும் என்பதால், நீண்டகால கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. எனவே நிதியை புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியாவுக்கு IMF அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கவும் IMF வலியுறுத்தியுள்ளது.
ஆனால் IMF-ன் கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது.
பெரும்பாலும் உள்நாட்டு நாணயத்திலேயே கடன்கள் பெறப்பட்டுள்ளதால் பெரும் அளவில் அபாயம் ஏற்படாது என சர்வதேச நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் கே.பி.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மத்திய, மாநில அரசுகளின் கடனுக்கான விகிதாச்சாரம் 2005-06-ல் 81 சதவிகிதமாக இருந்து பின்னர் 2021-22-ல் 84 சதவிகிதமாக அதிகரித்துள்ளதையும் ஆனால் 2022-23-ல் இது 81 சதவிகிதமாக மீண்டும் குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய மதிப்பைப் பொறுத்தவரை, இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் தலையீடு அதிகமாக உள்ளது என்று IMF மற்றொரு கருத்தை கூறியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் கண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள RBI, இதனால் நிலையற்ற தன்மையில் இருந்த ரூபாய் மதிப்பு Stabilized Arrangement என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே IMF-ன் கருத்து சரியானது அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…