இந்துக்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிக் காலங்களில் சென்று வர விரும்பும் முக்கிய கோயில்களில் காசி விஸ்வநாதர் கோயிலும் ஒன்று.
மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கும் – காசிக்கும் உள்ள ஆன்மீக, பண்பாட்டு தொடர்பை கொண்டாடும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசை கச்சேரி கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த தொடக்க விழாவின் போது நடந்தது.
இந்த நிலையில் மீண்டும் இளையராஜா இன்று (15ம் தேதி) காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உள்ளே இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
காசி விஸ்வநாதர் கோயிலில் இதுவரை தமிழை தாய் மொழியாக கொண்ட பாடகர்கள், இசையமைப்பாளர்கள் காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் இசை நிகழ்ச்சியில் பாடியது இல்லை அந்த வாய்ப்பை பெறும் முதல் தமிழராக இளையராஜா பாட உள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் இசைக்கச்சேரியில் 16 பாடல்களை இளையராஜா பாடுகிறார். அங்குள்ள சிவன் முன்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இளையராஜா முதன் முறையாகப் பாட உள்ளார்.
திருவாசகத்திலிருந்து 4 பாடல்கள் இடம்பெற உள்ளன. கோயிலுக்குள் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் இடவசதியுள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இராமானுஜம்