நா.மணி
ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று நினைப்பதும், படிக்க வைக்க ஆசைப்படுவதும் பெருங்கனவின் ஒரு வெளிப்பாடு.
அந்தப் பெருங்கனவை நனவாக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதற்கு அவர் தம் பெற்றோர் கொடுக்கும் ஒத்துழைப்பு, அதற்காக அவர்கள் படும் பாடுகள், கொடுக்கும் விலை… ஒவ்வொன்றும் ஒரு வீரம் செறிந்த போராட்டம். இந்த வீரம் செறிந்த போராட்டத்தில் வெற்றி வாகை சூடி, புகழ்மிக்க கல்வி நிறுவனங்களில் முதல் காலடி எடுத்து வைக்கும்போது, அவர்களின் உள்ளத்தில் எழும் நல் அலைகள் வீச்சு என்னவாக இருக்கும்!
இவ்வாறு சிகரம் தொட்ட தன் மகன் அல்லது மகள், இனி வாழவே முடியாது என்று தற்கொலை செய்து கொள்ளும் தருணம் எப்படிப்பட்டதாக இருக்கும். அதைக் கேள்விப்படும் பெற்றோர், குடும்பத்தார் உணர்வு நிலைகள் என்னவாக இருக்கும்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
பதினெட்டு வயதேயான தர்ஷன் சோலங்கி, மும்பை ஐஐடியில் சேர்ந்து நான்கே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனபோது, அவனது கடைசி நொடிகளில் என்ன நினைத்திருப்பார்! இப்போதும், தாங்கள் மரணம் அடையும் வரையிலும் சோலங்கியின் பெற்றோர் மனங்கள் எப்படியெல்லாம் குமுறிக் குமுறி அழுதுகொண்டே இருக்கும்.
2015ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா, அவரது பெருங்கனவு, வெறுங்கனவு ஆகும் தருணத்தில், அவர் எழுதிய மரண சாசன வரிகள், மனிதம் உள்ள எந்த மனிதனின் மனத்தைக் கசக்கி பிழிந்து விடும். தனுஷ் சோலங்கி மட்டுமல்ல, 2014 முதல் 2021 வரை 122 பேர் இப்படி உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். அதில் 34 பேர் ஐஐடி மாணவர்கள். 58 விழுக்காட்டினர் பட்டியல் இன பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்.
“என்ன இருந்தாலும் இவர்கள் தற்கொலை செய்திருக்கக் கூடாது” என்று அவர்கள் நினைப்பை உதறித் தள்ளிவிட்டு, அவரவர், அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோமா அல்லது, நமக்கும் கூட ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். நம்மால் இயன்ற வழியில் முயற்சி செய்யப் போகிறோமா?
“இவர்களின் தற்கொலைக்கு அவர்களது மன அழுத்தம் மட்டுமே காரணம். அதற்கு மருந்திட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்று ஒருவர் நினைத்தால், அது ஒரு வகை மமதை அல்லது ஒருவகை அறியாமை என்றே வர்ணிக்க வேண்டும்.
சமூகக் காரணிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல் காரணிகள், கற்றல் கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம், பயிற்று முறைமைகள், பயிற்று மொழி, ‘உயர்தர கல்வி நிறுவனங்கள்’ என்று கூறப்படும் நிறுவனங்களின் கையால் ஆகாத காரியங்கள் என எல்லாம் சேர்ந்துதான் சோலங்கிகளையோ ரோகித் வெமுலாக்களையோ கொன்று குவித்து வருகிறது.
இந்தியா தவிர வேறு எந்த நாட்டிலேனும் இப்படி உயர்தர கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தற்கொலைகள் நடக்கின்றனவா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
அப்போது, சாதியும், சமூக பொருளாதார வாழ்நிலையும் இந்தத் தற்கொலைகளுக்குக் கூடுதல் காரணம் என்பது புரிபடும். அறிவுசார் ஆற்றல் மிக்க நிறுவனங்களில், அறிவு வேலை செய்யாமல் அல்லது, அறிவை, ஆடை, அலங்காரம், நுனிநாக்கு, ஆங்கிலம்,சாதி, மதம் துவசம் செய்யும் அவலம் நேர்வதால் ஏற்படும் பரிதாபம் என்றும் இதனைக் கொள்ளலாம்.
உயர்தர கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளுக்கு அரசு, அரசியல், சமூகம் என எல்லாம் கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும். என்றாலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இந்த சிக்கலைத் தீர்ப்பதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவற்றை அவற்றின் ஒவ்வோர் அங்கமும் ஆய்வு பயணிக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
ஏழை,எளிய மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸில் நுழைந்துவிட்டாலும், பெரும் பொருளாதார சுமையை ஏற்க வேண்டி உள்ளது. இதனை ஈடுசெய்ய முடியாத மன உளைச்சலும் இந்த மரணங்களை பிரசவிக்கிறது. மடிக்கணினி வாங்க காசு இல்லை. நல்ல அறை எடுத்து தங்க முடியவில்லை என்று ஒரு மாணவி டெல்லி ஶ்ரீராம் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டார்.
பொருளாதார வசதியற்ற நிலையை, அதற்கான இழப்பீட்டை, வெறும் கவுன்சிலிங் மூலமும் ஆறுதல் வார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்க இயலாது. சக மாணவர்களைப் போல் நாமும் இருக்க வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்புகளை தவறு என்றும் ஒதுக்கிவிட முடியாது. தற்கொலைக்கான காரணங்களை தவறாகக் கணித்து விடுவதாலும் தற்கொலைகள் நிகழ்ந்து விடுகின்றன.
முதல் தலைமுறை பட்டதாரிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே இப்படிப்பட்ட மாணவர்களின் உயிரைப் பறித்து விடுவதில்லை. பட்டியல் இன, பழங்குடியினர் சமூகத்தை ஒரு பிரிவினர், கல்வி கற்று, முன்னேற்றம் அடைந்து விடுகின்றனர். நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம், சிலர் செல்வந்தர்களாகக்கூட வளர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
ஆனாலும் சாதி என்னும் அரவம் தீண்டாமல் விடுவதில்லை. நடுத்தர வர்க்கமாக மாறிவிட்ட இவர்களது பிள்ளைகளுக்கு, பள்ளியில் படிக்கும்போதோ, பழகும் இடங்களிலோ சாதியத்தின் கொடுமை, பிரித்து உணர்வதன் வலி தெரிவதில்லை. அவர்கள் உயர்கல்வி படிக்கும்போது சாதிய வேற்றுமை என்னும் விஷத்தால் தீண்டப்படும் தருணத்தில் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.
உயர்தர கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளுக்கு காரணங்கள் பல என்றாலும் அதன் அடிப்படை சமூக பொருளாதார வாழ்நிலை காரணிகளே முக்கியம். பல்கலைக்கழக மானியக் குழுவின் மேனாள் தலைவர் பேராசிரியர். சுகதேவ் தோரட் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீர்வுகள் முன் நிறுத்தப்பட்டது.
அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டதா எனப் பரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய சூழலில்,இத்தகைய தற்கொலைகளுக்கு இன்னும் பிரத்யேகமாக காரணங்கள் உண்டா எனவும் கண்டறிய வேண்டும்.
கல்வியில் உயர்ந்தும், சமூக பொருளாதார காரணிகள் அடிப்படையில் சக மனிதர்களை வேறுபடுத்தி, அந்த வெம்மை தாங்காது கொன்று அழிக்கும் கொடிய மனத்தை எப்படி மாற்றுவது என்று ஆய்ந்து அறிய வேண்டும். அதற்கென நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால தீர்வுகளை நோக்கி அரசும், அரசியல்வாதிகளும்,சமூக விஞ்ஞானிகளும் நகர வேண்டிய அதே நேரத்தில், உடனடித் தீர்வுகளுக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் இவர்கள் சார்ந்துள்ள சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், அதன் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
விளிம்பு நிலை மக்கள் வேர் பிடித்து வாழ நினைக்கும்போது, அதில் வெந்நீர் ஊற்றும் வேலையே இந்தத் தற்கொலைகள். கல்வி தான் சமூக மேன்மையின் கதாயுதம் என்று நீடிக்கும் வரை ஐஐடி ஐஐஎம் எய்ம்ஸ் பெருங்கனவுகளும், அதை அடையும் முயற்சிகளும், அதன் அடிப்படையில் சமூகம் முன்னேற்றம் என்ற தொடர் பயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
அந்தப் பயணத்தை இடை முறித்து பெருங்கனவை வெறுங்கனவாகச் செய்யும் செயல்களை மனிதம் ததும்பும் மனங்கள் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்.
கட்டுரையாளர்:
நா.மணி பேராசிரியர் மற்றும் தலைவர் – பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.
கொளுத்தும் வெயில்: உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் முக்கிய அறிவுரை!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கிகள்!
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உரியவர்கள் யார் என்ற உண்மை அறியாதவர்களா? நாம். ஆரம்பக்கல்விமுதல் எப்படிப்பட்ட குறிக்கோள்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பயின்றுள்ளார்கள் ; சாதனைகளை மட்டும் பறைசாற்றும் பள்ளிகளின் மற்ற உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் வேதனைகளான தன்னம்பிக்கையின்மை மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் மனோதைரியமின்மை போன்ற காரணிகளை இப்போதாவது அலச சமூகத்தில் யார் பொறுப்பேற்பது? தற்கொலை செய்யத் தூண்டப் படுகிறார்களா? அல்லது கொலைகள் தற்கொலைகளாக மாற்றப்படுகின்றனவா? ஏழ்மையில் உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்கப் பெற்றவர்கள் வங்கிக் கல்விக் கடன்பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளார்களா ? உயர்சாதியினரின் சுயநலப் பாதகச் செயல்களின் தாக்கமா ? பந்தப் பாசங்களுக்கு அடிமைப்பட்டுப் பிரிவைத் தாங்க முடியாமல் உளப் பாதிப்புக்குள்ளாகியவர்களா ? என் இன்னுமும் உள்ள பல காரணிகளையும் கருத்தில் கொண்டு நடத்தும் ஆய்வுகள் இனி நடக்கப் போகும் பாதிப்புகளைக் குறைக்கும் நேர்மறையான தீர்வாகும் . தாங்கள் இதுபோன்ற பிற்கால சந்ததியினரின் பிரச்சனைகளில் தலையிட்டு எழுதுவது பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள் தோழர் !
Well said