உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் வைத்த ஐ.எப்.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து திரிபுரா அரசு இன்று (பிப்ரவரி 26) உத்தரவிட்டுள்ளது.
திரிபுரா செபாஹிஜாலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி வனவிலங்கு சரணாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட சீதா, அக்பர் என்ற பெயருடைய சிங்கங்கள் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டன.
இது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா, ”ராமரின் மனைவியாக இருக்கும் சீதை இந்து மத வழக்கங்களின் படி தெய்வமாக கொண்டாடப்படுகிறார். வரலாற்றில் அக்பர் மிகவும் திறமையான, வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசராக உள்ளார். சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்று பெயர் வைப்பதை நான் ஆதரிக்கவில்லை.
சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு சில பெயர்களை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம்” என்று அவர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், ”இந்தப் பெயரை வைத்தது யார் எபதை தெரியாது என்கிறீர்கள்… மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் நீங்கள் ஏன் சிங்கத்துக்கு சீதா, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்?” என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இரண்டு சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என பெயர் வைத்ததாக மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வால் என்பவரை சஸ்பெண்ட் செய்து திரிபுரா அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
1994-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரியான பிரபின் லால் அகர்வால், சிலிகுரிக்கு அனுப்பும் போது சிங்க தம்பதிகளின் பெயர்களை ‘அக்பர் மற்றும் சீதா’ என்று பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முக்கிய நிர்வாகி விலகல் : நெருக்கடியில் ஜி.கே.வாசன்
மீண்டும் இணையும் ‘பொன்னியின் செல்வன்’ ஜோடி… இயக்குநர் யாருன்னு பாருங்க!