”யாருக்கும் உத்தரவாதம் கிடையாது”: இஸ்ரேலை எச்சரித்த ஈரான்!
இஸ்ரேல் காசா மீது தரைவழி தாக்குதலை முன்னெடுத்தால் அதன்பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் இதுவரை 724 குழந்தைகள் உட்பட குறைந்தது 2,329 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவில் உள்ள 11 லட்ச மக்களை தெற்கே செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து வடக்கு காஸா எல்லையை நெருங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடுக்க தற்போது அரசின் உத்தரவுக்காக காத்து நிற்கிறது.
இந்த நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (அக்டோபர் 15) சந்தித்தார்.
அப்போது காசா மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடற்ற தாக்குதல், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன மக்களின் நிலை மற்றும் ஹமாஸ் குழுவுக்கு தேவையான அரேபிய நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், போராட்டாத்திற்கு தொடர்ந்து ஒத்துழைக்க கத்தார் மற்றும் ஈரான் நாடுகள் ஒப்புக்கொண்டதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்,
“காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் (இஸ்ரேல்) தாக்குதல்கள் தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்தவும், மோதல்கள் விரிவடையாமல் இருப்பதற்கும் யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். எனினும் காசா எல்லையில் தயாராக இருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் தொடர்பாளர்களான லெப்டினன்ட் ரிச்சர்ட் ஹெக்ட், “காசா மீதான இந்த படையெடுப்பு ஹமாஸ் தலைமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது, அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 9 நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பதற்றம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ENGvsAFG: மீண்டும் அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்?
போட்டித்தேர்வில் வட இந்தியர்கள் மோசடி: விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!