இந்திய இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று (நவம்பர் 21) விளக்கமளித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் பரவலுக்கு பிறகு மாரடைப்பானது இந்திய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. குறிப்பாக குஜராத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது கர்பா நடனமாடிய 10 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரம் கோவிட் தடுப்பூசி குறித்த கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியது.
இந்தநிலையில் இந்தியாவில் உள்ள 47 மருத்துவமனைகளில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் 31 வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 18 – 45 வயது உள்ள இளைஞர்களிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் கோவிட் 19 தடுப்பூசி இந்திய இளைஞர்களிடையே திடீர் இறப்பு அபாயத்தை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட திடீர் இறப்பு அபாயத்தை குறைக்கலாம். கோவிட் தொற்றின் போது மருத்துவமனையில் பெறப்பட்ட சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், மது அருந்துதல், புகை பிடித்தல் தீவிரமான உடல் உழைப்பு போன்ற காரணங்கள் திடீர் இறப்புக்கான காரணங்களாக இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, “கோவிட் தடுப்பூசி குறித்து ஐசிஎம்ஆர் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அளவுக்கு அதிகமான வேலைகளில் ஈடபட வேண்டாம். மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கடினமான உடற்பயிற்சிகளிலிருந்து சற்று விலகியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம்: மன்சூர் அலிகான் எச்சரிக்கை!