வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.சி.எஃப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 44 இரண்டாம் தலைமுறை வந்தே பாரத் ரயில்களைத் தயாரிப்பதற்கான ஆர்டர் ஐசிஎஃப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதுதவிர, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள எம்சிஎஃப், ஹரியானாவின் சோனிபட் நகரில் உள்ள ஆர்சிஎன்கே மற்றும் மகாராஷ்டிராவின் லத்தூரில் உள்ள எம்ஆர்சிஎஃப் ஆகிய தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் ரயில் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், 120 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரஷ்யாவின் ஜேஎஸ்சி மெட்ரோவேகன்மஷ்-மிதிஸ்சி (டிஎம்எச்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான ஆர்விஎன்எல் உடன் கூட்டு வைத்துள்ள டிஎம்எச் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கும்.
தேவைப்பட்டால் ரயில்களின் எண்ணிக்கை 200-ஆக உயர்த்தப்படலாம் என ரஷ்ய நிறுவனத்திடம் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில், குறைந்தபட்சமாக ஒரு ரயிலுக்கு ரூ.120 கோடி எனக் குறிப்பிட்டிருந்ததால் டிஎம்எச்-ஆர்விஎன்எல் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.சி.எஃப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
தற்போது ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எஃப். உருவாக்கிய நிலையில், புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்?
மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஐ.சி.எஃப் இலவசமாக வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
பியூட்டி டிப்ஸ்: மருக்களை எப்படி நீக்கலாம்?
வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!