ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரம் மொசூல். இந்த நகரம் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஐ.எஸ். அமைப்பின் வசம் இருந்தது. ஈரான் படைகள் மொசூல் நகரத்தை போட்டு தாக்கியதில் அந்த நகரமே அழிந்து போனது. அங்கிருந்த ஆலயங்களும் அழிந்து போயின.
இந்த நகரத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போப் பிரான்சிஸ் பயணம் செய்தார். கோவிட் காலமென்பதால் குறிப்பிட்ட சிலரே போப்புடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சமயத்தில் ஈராக்கில் நடந்த விஷயங்கள் குறித்து தனது வாழ்க்கை வரலாறு புத்தகமான ‘ஹோப் ‘என்ற புத்தகத்தில் போப் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நான் பாக்தாத் சென்று இறங்கினேன். அப்போது, பெண்ணும் இளைஞர் ஒருவரும் உடலில் வெடிகுண்டுகள் கட்டிக் கொண்டு என்னை கொல்ல முயன்றது தெரிய வந்தது. அதற்குள், பிரிட்டனை சேர்ந்த புலனாய்வு அமைப்பு ஈராக் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டனர். இதையடுத்து, ஈராக் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டனர். அந்த இருவரும் நான் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் புகுந்து என்னை கொல்ல திட்டமிட்டிருந்துள்ளனர். அதாவது, ஸ்பீடாக வேனில் சென்று நிகழ்ச்சிக்குள் புகுந்து, தாக்குவது என்பது அவர்களின் திட்டமாக இருந்துள்ளது.
தொடர்ந்து, அதிகாரிகள் திட்டமிட்டு அவர்களை பிடித்து விட்டனர். அடுத்த நாள் அங்கேயிருந்த அதிகாரிகளிடத்தில் என்னை கொல்ல வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று நான் கேட்டேன். அப்போது, அதிகாரிகள் என்னிடத்தில் அந்த இருவரும் உயிருடன் இல்லை. எங்கள் அதிகாரிகள் அவர்களை வெடிக்க செய்து விட்டனர் என்று பதில் சொன்னார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 14 ஆம் தேதி போப் எழுதிய ஹோப் புத்தகம் வெளியாகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த புத்தகம் எழுதப்பட்டு வந்தது. போப் பிரான்சிஸின் மறைவுக்கு பின்னரே இந்த புத்தகத்தை வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த நூற்றாண்டின் முதல் 25 வது ஆண்டு வருவதால், ஹோப் புத்தகத்தை முன்னரே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்