“அஞ்சலி காரில் இழுத்து செல்லப்பட்டதை பார்த்ததும் எனது நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன். பயத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்” என்று டெல்லியில் உயிரிழந்த இளம்பெண்ணின் தோழி தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் அஞ்சலி சிங். புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் இவர் சென்ற ஸ்கூட்டியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, காரின் அடியில் சிக்கிக்கொண்ட அஞ்சலி 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காரில் பயணம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், தனது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சலியின் தாயார் சந்தேகத்தை எழுப்பினார். அதைத் தொடர்ந்து உயிரிழந்த அஞ்சலியின் பிரேத பரிசோதனை மவுலானா மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
அதில், அவரது உடலின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு அவர் ஆளாக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அஞ்சலியின் உடல் மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உடனடியாக தகனம் செய்யப்பட்டது.
பயத்தில் போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை
இந்நிலையில் விபத்து நடைபெறும் போது அவரோடு ஸ்கூட்டியில் பயணம் செய்த தோழி நிதி செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் கூறுகையில், “புத்தாண்டு பார்ட்டி முடிந்து திரும்பும் போது, அஞ்சலி மது அருந்தியிருந்தார். அதனால் அவரிடம் நான் வண்டியை ஓட்ட வேண்டாம் என்று கூறினேன். இதனால் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அஞ்சலிதான் ஸ்கூட்டியை ஓட்டி வந்தார்.
வரும் வழியில் எங்களை கார் மோதியதும், ஒரு புறமாக நான் விழுந்து கிடந்தேன். காரின் முன்பக்க அடியில் தோழி சிக்கி கொண்டார். காரின் கீழ் அஞ்சலி சிக்கி கொண்டார் என்பது அதில் இருந்தவர்களுக்கு தெரியும். எனினும் அவர்கள் வேண்டுமென்றே கார் அடியில் சிக்கிய அஞ்சலியுடன் காரை ஓட்டினர். அவள் கதறியும் அவர்கள் கேட்கவில்லை.
இதனை கண்டதும் எனது நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. பயந்து போன நான் போலீசாரிடம் புகார் எதுவும் தெரிவிக்காமல், நேராக வீட்டிற்கு நடந்தே வந்துவிட்டேன். எதுவும் கூறினால் நான் குற்றவாளியாகி விடுவேன் என்ற பயத்தில் யாரிடமும் எதுவும் கூறவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
போதையில் பாட்டு கேட்டு வந்தோம்
இதற்கிடையே காரில் இருந்த 5 பேரும், ஸ்கூட்டியை மோதியதால் தாங்கள் பீதியடைந்ததாகவும், அந்த பெண் கீழ் வண்டியில் சிக்கியிருப்பது எங்களுக்கு தெரியாது என்றும் காவல்துறையிடம் கூறியுள்ளனர்.
மேலும் “காரில் மதுபோதையில், பாடல்கள் கேட்டபடி ஹரியானா மாநிலம் முர்தலில் இருந்து திரும்பி கொண்டிருந்தோம். காரில் இசை சத்தம் கேட்டதால், காரில் சிக்கிய பெண்ணின் சத்தம் கேட்கவில்லை.
ஜொண்டி கிராமத்திற்கு அருகில் யு-டர்ன் எடுக்கும்போது, அந்தப் பெண்ணின் கையைப் பார்த்ததும், காரை நிறுத்தி சடலத்தை அங்கேயே வைத்துவிட்டு காரில் சென்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.
என்ன மாதிரியான நட்பு இது?
இந்நிலையில் டெல்லி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன் தோழி விபத்தில் சிக்கியதைப் பார்த்தும் அவருக்கு உதவாமல் வீட்டுக்குச் சென்ற நிதி சொல்லும் வார்த்தைகள் எப்படி நம்ப முடியும்? என்ன மாதிரியான நட்பு இது?
நிதி சொல்லியதுபோல் அஞ்சலி மது அருந்தியிருந்தாரா என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் இறந்தபின்னர் இதனையெல்லாம் நிதி சொல்வது அஞ்சலியின் நடத்தையை படுகொலை செய்வதற்கு சமம்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணையில், அஞ்சலியின் தோழி நிதியையும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டு அன்று நடந்த இந்த கொடூரமான சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் டெல்லி சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கிடம் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நீ என்ன பெரிய ஆளா? டிவி சேனல்னா பயப்படனுமா? – செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை
பணி நீக்கம்: ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரதம்!
பிகினிங் படத்தை வெளியிடும் லிங்குசாமி