இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைந்து விட்டார். அவரின் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. தற்போது, அவரை பற்றிய பல விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய பொருளாதார நிபுணர், சிறந்த பிரதமர் என பல முகங்கள் கொண்டிருந்தாலும் எளிமையும் மனிதாபிமானமும் நிறைந்த மனிதராக மன்மோகன் வாழ்ந்து மறைந்துள்ளார் என்றால் மிகையல்ல.
இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மன்மோகன் சிங்குடன் தனக்குள்ள நெருக்கமான பந்தத்தை சமூகவலைத் தள பதிவு வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தந்தை என்றால் மிகையல்ல. இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்தவர். அரசியல் சதியின் ஒரு பகுதியாக நான் சிறையில் அடைக்கப்பட்டபோதுதான் மன்மோகன், எனது குழந்தைகளின், குறிப்பாக எனது மகனின் கல்விச் செலவுக்கு பணம் செலுத்த முன்வந்தார். இது அப்போதைய மலேசிய அரசை பகைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கும் அவரை தள்ளி விடும். எனினும், எனக்கு அந்த உதவியை செய்ய அவர் முன் வந்தார். ஆனால், நான் அவரின் உதவியை பணிவுடன் வேண்டாம் என்றேன்.
மலேசிய நிதியமைச்சராக அன்வர் இருந்த காலக்கட்டத்தில் 1990 ஆம் ஆண்டுகளில் மன்மோகன் இந்தியாவில் நிதியமைச்சராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் நல்ல நட்பு இருந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.
மலேசிய அமைச்சரவையில் இருந்து அன்வர் நீக்கப்பட்ட பிறகு, 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் . சர்ச்சைக்குரிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் மற்றும் தன்பாலின உறவு போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. சிறைவாசத்தின் போது உடல் ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் உண்டு.
எனது இருண்ட காலத்தில் தன்னை கருணையுடன் மன்மோகன் நடத்தியதாகவும் அன்வர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஊஊஊ… ஊளையிட்ட ரசிகர்கள்: திரும்பி வந்து முறைத்த கோலி; எம்.சி.ஜியில் நடந்தது என்ன?