தனது இளமை காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் ’ரேடியோ ஜாக்கி’ யாக வேலை பார்த்துள்ளதாக இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்சநீதிமன்றத்தின் 50-வது நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார் டிஒய் சந்திரசூட்.
அயோத்தி தீர்ப்பு, தனிமனித உரிமை, சபரிமலை வழக்கு, சஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளின் குழுவில் இவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஜூனியர் வழக்கறிஞராக தனது தொழிலை தொடங்கி பல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2000-ஆவது ஆண்டுகளில் மும்பை நீதிமன்றத்தில் நீதிபதியான சந்திரசூட், பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
அவரது நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமின்றி அவர் குறித்து பலரும் அறிந்த சுவாரஸ்ய தகவல்கள் தான் இவை.
ஆனால், இதையும் தாண்டி யாரும் அறியாத ஒரு மறைமுக வாழ்க்கையையும் சந்திரசூட் வாழ்ந்ததை அவரே வெளிப்படையாக பேசியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பார் கவுன்சில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பில் இந்திய-சர்வதேச சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் முதல் கல்வி அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “நிறைய பேருக்கு இது தெரியாமல் இருக்கலாம் ஆனால், எனது 20 வயதில் நான் ஒரு மூன்லைட் வாழ்க்கையை (யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூடுதலாக வேறு ஒரு வேலையை செய்வது) வாழ்ந்துள்ளேன்.
ஆல் இந்தியா ரேடியோவில் ‘பிளே இட் கூல்’, ‘ஏ டேட் வித் யூ’, ‘சண்டே ரெக்யூவஸ்ட்’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். இசை மீதான எனது அன்பு இன்றும் தொடர்கிறது. வழக்கறிஞர்கள் வழக்காடுவதை தினசரி இசையாக கேட்டு முடித்த பிறகு, வீட்டிற்கு சென்று, என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் காதுகளுக்கு இனிமையாக இருக்கும் இசையைக் கேட்பேன்” என சந்திரசூட் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்