ஆடியோ, வீடியோக்கள் தமிழ்நாட்டு அரசியலை உலுக்கியதைப் போல அமெரிக்க அரசியலில் தற்போது போட்டோ புயல் வீசிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இரண்டாவது மகனான ஹன்டர் பைடன் மீது போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் வரிப்பணம் செலுத்தாதது ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

81 வயதான ஜோபைடன் தனது 78 வது வயதில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது இரண்டு முறை அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றியுள்ளார் ஜோ பைடன்.
இது மட்டுமல்லாது 36 ஆண்டுகளுக்கும் மேலாக செனட்டராக பணியாற்றியுள்ள இவர் அமெரிக்காவின் உயரிய விருதான சிவிலியன் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது முப்பதாவது வயதில் அமெரிக்க செனட் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பைடன். ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே தன் குடும்பத்தோடு காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவரது மகளும், மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். அதைத் தொடர்ந்து ஓராண்டிலேயே அவரது மூத்த மகனும் புற்றுநோயால் இறந்து விடுகிறார்.
இந்நிலையில் ஜோ பைடனின் இரண்டாவது மகனான ஹன்டர் பைடன் போதை பொருள் பயன்படுத்தி உள்ளார் எனவும், அதற்கான ஆதாரங்கள் அவரது மடிக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் கூறி சுமார் 10,000 புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
அவற்றில் ஹண்டர் பைடன் போதை பொருட்களை எடுத்துக் கொள்வது, விலை மாதர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளரான மார்க்கோபோலோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் பைடனின் மகன் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப் பழக்கம் மட்டுமல்லாது உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது, அரசுக்கு வரி செலுத்தாமல் இருந்தது, மற்றும் அரசு ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக அவர் மீது கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக ஹண்டர் பைடன் தான் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் தனது அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் தான் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும் இனிமேல் போதைப் பொருள்களை தொட மாட்டார் எனவும், அடுத்த 24 மாதங்களுக்கு போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் மறுவாழ்வு சிகிச்சை எடுத்துக் கொள்வார் எனவும், இனி துப்பாக்கியை வைத்திருக்கவோ பயன்படுத்தவோ மாட்டார் எனவும் அவரது வழக்கறிஞர் வட்டாரத்தில் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதன் அடிப்படையில் அவர் மீதான விசாரணை நிறுத்தப்பட்டு அவர் சிறைக்குப் போவது தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் நீதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது.
2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் வேலைகள் தொடங்கி விட்ட நிலையில் ஜோபைடன் ஜனநாயக கட்சியின் சார்பாக மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கட்சிக்குள் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அவர் போட்டியிடலாம் என்ற நிலையில் ஜோ பைடனின் மகன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியிருப்பது அவரது அரசியல் பயணத்திலும் எதிரொலிக்கலாம் என்கிறார்கள் அமெரிக்க பத்திரிகையாளர்கள்.
மேலும் இந்த புகைப்படங்களை டிரம்ப்பின் ஆதரவாளர் வெளியிட்டிருப்பதால் இதில் நிச்சயமாக அரசியல் உள் நோக்கம் இருக்கிறது என்று சமூக தளங்களில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அரசியல் தலைவரின் வாரிசு என்றாலே உலகம் முழுதும் பிரச்சினைதான் போல.
சண்முகப் பிரியா
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பின் முழு பின்னணி!