உலக மக்கள் தொகை இன்று 800 கோடியை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. அடுத்தாண்டு மக்கள்தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ள உள்ளது.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஐநா சார்பில் மக்கள் தொகை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். அதன்படி கடந்த ஜூலை மாதம் வெளியான விபரங்களின்படி உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் 850 கோடியாகவும்(8.5 பில்லியன்), 2050 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 970 கோடியாகவும் (9.7 பில்லியன்) இருக்கும். இது 2080 இல் 1,040 கோடியாகவும் , இந்த விகிதம் 2100 ஆம் ஆண்டு வரை தொடரும் என கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக ஐநா சபையில் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகையில், ’’இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினம் என்பது ஒரு மைல்கல். உலகில் 800 கோடி மக்கள் வசிப்பதை நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு நவம்பரில் இது நடக்கலாம். இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதாபிமானத்தை அங்கீகரிப்பதற்கும் வழியாக இருக்கும். மனிதர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியக்கத்தக்க வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்தை பார்த்து வியப்படைய நல்ல வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

மூன்று மடங்கு அதிகரிப்பு
அதன்படி உலக மக்கள் தொகையானது இன்று 800 கோடியை தொட்டுள்ளது. இது தொடர்பாக ஐநா வெளியிட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1950 இல் உலக மக்கள் தொகை 200 கோடியாக இருந்த நிலையில் தற்போது உலக மக்கள் தொகை 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
இருப்பினும் சமீப ஆண்டுகளாக கருவுறுதலில் சரிவு ஏற்பட்டுள்ளதால் 2050 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை 0.5 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும். ஆனாலும் 2080 ஆம் ஆண்டு மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும். மேலும் அடுத்த 100 கோடி மக்கள் தொகை காங்கோ, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளில் 8 நாடுகள் மிகப்பெரிய அளவில் 50 சதவீதம் வரை பங்கு வகிக்க உள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.
சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா
மேலும் 2023 இல் இந்தியாவின் மக்கள் தொகை என்பது சீனாவை விட அதிகரிக்கும். இந்தியாவில் தற்போது 1.39 மில்லியன் (139 கோடி) மக்கள் உள்ளனர். இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகம். பிரிட்டனை ஒப்பிடும்போது 20 மடங்கு அதிகம். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐநா கூறியுள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் தினமும் 85 ஆயிரம் பேர் பிறக்கின்றனர். ஆனால் சீனாவில் 49, 400 பேர் தான் பிறப்பிக்கின்றனர். அதோடு இந்தியாவின் மக்கள் தொகையானது 2060 இல் 1.65 பில்லியன் (165 கோடி) ஆக இருக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் ஆயுட்காலம்
மேலும் மனிதர்களின் ஆயுட்காலம் 2019 இல் 72.8 ஆண்டுகளாக இருந்தது. இது கடந்த 1990 இல் இருந்து 9 ஆண்டுகள் வரை முன்னேற்றம் கண்டுள்ளது. அதோடு 2050இல் ஒருவரின் ஆயுட்காலம் என்பது 77.2 ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஐநா ஏற்கனவே தெரிவித்துள்ளது.
அச்சம் வேண்டாம்
இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கனெம் ” நமது உலகில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். மனித உயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எடப்பாடிக்கு புதிய சிக்கல்: மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடா?
டிஜிட்டல் திண்ணை: பாஜக கூட்டணி – தொண்டர்களிடம் பல்ஸ் பார்க்கும் எடப்பாடி
Comments are closed.