ஸ்ரீராம் சர்மா
இந்திய மண்ணில் வர்க்க பேதங்களைக் கடந்து பெரும்பாலான மக்களால் நாடெங்கும் பரந்து விரிந்து கொண்டாடப்படும் தவிர்க்க இயலாத பெரும் பண்டிகையாகிறது தீபாவளி.
புத்தாடை, அதிகாலை பட்டாசு, இனிப்பு எனச் சிறுவர்களின் மன உலகத்தில் புதுசுகம் காட்டி – வாழ்நாள் நினைவாகத் தங்கிவிடக் கூடிய அந்த தீபாவளியானது இதோ இன்னும் இரண்டு வாரங்களில் இறக்கை கட்டிக் கொண்டுவந்து விடப் போகிறது.
இதுகாறும் தீபாவளியை இந்தச் சமூகம் கொண்டாடிக் களித்துக் கடந்ததா – கடக்கின்றதா எனில் தொண்ணூற்றைந்து விழுக்காடு இல்லை என்றே சொல்லி விடலாம்.
ஆம், பெரும் பணக்காரர்களுக்கும், பேங்க் பாலன்ஸை தளரக் கொண்ட மேலடுக்கு வர்க்கத்தவர்களுக்கும் தீபாவளி செலவுகள் குறித்து எந்தக் கவலையும் இருப்பதில்லை.
ஆனால், நடுத்தர மற்றும் ஏழைப் பெற்றோர்களது வாழ்வில் – தீபாவளி கொண்டாட்டம் என்பது பதற்றம் மிகுந்த பெரும் போராட்டமாகி நிற்கிறது. காரணம், தீபாவளிக்கான கொண்டாட்டச் செலவானது குடும்பத்துக்கான மாதச் செலவின் மூன்று மடங்காகிறது.
தீபாவளி செலவுக்காக வட்டிக்குக் கடன் கேட்டு – அது கிடைக்குமா, கிடைக்காதா என ஏங்கி நிற்கும் தகப்பன்கள் ஒருபுறம், ஒருவேளை அந்தக் கடன் கிடைக்காமல் போனால் குழந்தைகளை எப்படித் தேற்றுவது எனத் தவிக்கும் தாய்மார்களின் கையறுநிலை ஒருபுறம் என…
மானுடத்தை அரிக்கும் பரிதவிப்பானதோர் ஆண்டுச் சடங்காகி நிற்கிறது தீபாவளி கொண்டாட்டம்.
பரிதவிக்க வைக்கும் அந்த தீபாவளியைப் புறக்கணித்து விடலாமா என்றால் அதுவும் முடியாது. காரணம், மானுடவியலில் கொண்டாட்டம் என்பது பெருங்கூறு.
ஆம், கொண்டாட்டம் என்பது தனித்ததொரு மதம்!
பழ வண்டி தள்ளுபவரானாலும் – வானமே கூரையாக தெருவோரம் அமர்ந்து செருப்பு தைப்பவரானாலும் தீபாவளி நாளை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார். நடைபாதைக் கடைகளை நாடியாவது புதுத்துணி எடுக்காமல் விடமாட்டார்.
பண்டிகைக் காலங்களை வேட்டையாடிவிட ஆலாய்ப் பறக்கும் பொல்லாத வியாபார உலகமும் சராசரி மக்களின் அப்பாவி உணர்வுகளை தன் விளம்பரங்களால் சுண்டி இழுத்து தூண்டியபடியே இருக்கிறது.
விலைவாசி எவ்வளவுதான் உயர்ந்த போதிலும் ஜவுளிக் கடைகளில் ஏறி இறங்கும் கூட்டம் குறைந்தபாடில்லை. பட்டாசு வெடிக்க காலத் தடை விதிக்கப்பட்ட போதிலும் மக்களின் கொண்டாட்ட மனம் அடங்கி விடவில்லை. இனிப்புக் கடைகள் வகை வகையாக விற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
சரி, தவிர்க்கவே இயலாத அந்தக் கொண்டாட்டத்தை இல்லாதோருக்கும் உரியதாக பரவலாக்கி விட முடியாதா எனும் நப்பாசையோடு கூடிய ஆதங்க ஆவலாதியே இந்தக் கட்டுரைக்கான நோக்கம்.
அது சாத்தியமாகுமா எனில் ஆகும்!
பல ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய மண்ணில் புகழுடைய தமிழ் தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்தேன். இஸ்லாமியரான அவரது பெயர் பெட்டாலிங் ஜெயாவில் மிகப் பிரசித்தம். கலைகளின்பால் ஈடுபாடு கொண்ட அவர் அன்றைய நாளில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மறைமுகமாக ஃபைனான்ஸ் செய்து கொண்டிருந்தார்.
சூஃபி துறவி ஒருவரைச் சந்தித்ததோர் நாளில் வட்டிக்கு விடுவதைச் சட்டென நிறுத்திக்கொண்டவர், அன்று முதல் பெருங்காரியம் ஒன்றை மனமுவந்து செய்யத் தொடங்கினார்.
தன்னிடமிருந்த முந்நூற்று சொச்சம் தொழிலாளிகளில் முப்பது பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பகுதி நேர வேலை ஒன்றைக் கொடுத்தார்.
அதன்படி, தமிழகத்தில் பின்தங்கிய முப்பது கிராமங்களை அடையாளம் கண்டு – ஒவ்வொன்றிலும் முப்பது ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து,
அந்தக் குடும்பத்து சிறுவர் – சிறுமியரின் பட்டியலையும் – அவர்களது உடை அளவுகளையும் எடுக்கச் செய்து, நகரத்தின் சிறந்த டைலர்களைக் கொண்டு அவர்களுக்கான உடைகளைத் தைக்கச் சொல்லி, அதை இனிப்பு வகைகளோடு தனித்தனியே தங்க வண்ண அட்டைப் பெட்டியில் அடைத்து, ரம்ஜானுக்கு முந்தைய நாளில் – அன்பும் அரவணைப்புமாக வீடு தேடிச் சென்று கொடுக்கச் செய்தார்.
அந்தத் தருணம் – விடியலை நோக்கிக் காத்திருக்கும் அந்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் “யா அல்லாஹ்” என எழுப்பும் அந்தக் கொண்டாட்ட கூச்சல்களின் ஊடே – தன் வாழ்க்கை அர்த்தப்பட்டு விட்டதாகக் கொண்டு நிறைந்தார். இன்று வரை அதைத் தொடர்கிறார்.
கவனியுங்கள்…
தனிப்பட்ட ஒருவரின் நோக்கமும் செயலும் “இந்த உலகமானது பேரன்பின் வழிபட்டது“ எனும் உன்னத நம்பிக்கையை ஆயிரம் குழந்தைகளின் அடி மனதில் ஆழ விதைக்க முடியும் எனில்,
தமிழ்நாட்டைக் கட்டியாளும் பெருங்கட்சிகள் தங்கள் மாவட்டச் செயலர் தொடங்கி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் வரையிலான முக்கியஸ்தர்கள் வழியே மானுடத்தைப் போற்ற முன்வந்தால்…
“இந்த உலகமானது பேரன்பின் வழிபட்டது“ எனும் குதூகல நம்பிக்கையை பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் உள்ளங்களில் ஊன்றி விதைத்து விடலாம் அல்லவா!?
ஒவ்வோர் ஊராட்சியிலும் வசதிப்பட்ட இருவர் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் மனம் வைத்து முனைந்தால் குறைந்தது பத்து குழந்தைகளின் கொண்டாட்டக் கனவையேனும் நிறைவேற்றிவிட முடியும் அல்லவா!?
அதற்குத் தேவை மானுடம் சுமந்த மனம்! அந்த மானுட மனதை உசுப்ப வல்லதொரு அரசியல் தலைமை!
வல்லதொரு கட்சியினால் நாடு தழுவிய போராட்டம் ஒன்றை அறிவித்து அதை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் எனில், மானுடம் தழுவிய இந்த நல்ல காரியத்தையும் செய்துவிட முடியும் தானே!
ஒரு போராட்டம் என்றால் மேடை, ஒலிபெருக்கி, ஃப்ளக்ஸ் பேனர்கள், கொடிகள் எனக் குறைந்தது இருபதாயிரமாவது செலவாகுமே. அந்தப் பணத்தைக் கொண்டு குறைந்தது பதினைந்து குழந்தைகளின் வண்ணக் கனவுகளை வழிமொழிந்து விடலாமே!
அதன் மூலம் நாட்டு மக்களிடம் அன்பு போர்த்திய ஒன்றிணைவை உண்டாக்கிவிட முடியுமே! கட்டமைப்புமிக்க அரசியலாளர்கள் முயன்றால் முடியாதது உண்டா?
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
என்பார் திருவள்ளுவப் பேராசான். ஆம், அன்புடன் செய்யப்படும் எந்தச் செயலும் உடலுடன் உயிர் கொள்ளும் தொடர்புக்கு இணையானதாகும்.
மீண்டும் சொல்கிறேன்… இங்கே ஆயிரம் மதங்கள் இருக்கலாம். அதற்கு ஆயிரம் தலைமைகள் இருக்கலாம். ஆயினும், கொண்டாட்டம் என்பது தனித்ததொரு மதம்.
அது ஒன்றுதான் மக்களுக்கான பொதுமையான மதம்! அந்த மதத்துக்கான ஒரே கோட்பாடு கொண்டாட்டம்!
அந்தக் கொண்டாட்ட நாளை சுகப்படுத்தி வைப்போரை மட்டும்தான் அந்த மதம் நன்றியோடு வரித்துக்கொண்டு வாழும்!
வாழட்டுமே!
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால்.
மணிவிழா காணும் காஞ்சீவர பாணி !– வே.ஸ்ரீராம் சர்மா
மறுதலிக்கப்படுமாம் தற்கொலைகள் ! –வே.ஸ்ரீராம் சர்மா
ஐ.நாவில் இலங்கை தீர்மானம்: இந்தியா எடுத்த முடிவு!
கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக தீபாவளி பிறர் வாழ்வில் ஒளியூட்டும் கொண்டாட்டமாக இருந்து வருகிறது!
இந்த கருத்தை லட்சக்கணக்கான குடும்பங்கள் பின்பற்றி வருகின்றன!
நல்ல எண்ணம் படவேண்டியவர்கள் கண்ணில் பட்டால் நன்றாக இருக்கும்