அமைதிக்கான நோபல், விடுதலை பெற்றுத் தருமா… யார் இந்த நர்கீஸ்?
ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகள், இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நர்கீஸ் முகமதி என்ற 51 வயது பெண்ணுக்கு வழங்கப்படுகிறது.
ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வரும் ஈரானில் 9 வயதுக்கு மேல் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். பெண்கள் ஹிஜாப் அணிகிறார்களா, முறையாக அணிகிறார்களா என்பதை கண்காணிக்கவே ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு போலீஸார் சோதனையில் ஈடுபடுவார்கள்.
ஈரானின் மேற்கில் அமைந்துள்ள குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர், 22 வயதான அமினி. கடந்த ஆண்டு தனது உறவினரை பார்க்க சென்ற போது முறையாக ஹிஜாப் அணியவில்லை என போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் காவலில் கொடூரமாக தாக்கப்பட்ட அமனி, கோமா நிலைக்குச் சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரானில் அமினிக்கு ஆதரவாக போராட்டம் வெடித்தது. ஈரான் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த போராட்டம் அமைந்தது.
இப்படி ஈரானில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அமினி போன்று பல பெண்கள் கட்டுப்பாடு என்ற பெயரில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆடை சுந்தந்திரம், பெண் சுதந்திரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி என ஈரானில் போராட்டம் வெடிப்பதும் தொடர்கதை.
அப்படி பெண்கள் சுதந்திரத்துக்காகவும், மனித உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதி(51).
இவருக்கு நார்வே நோபல் கமிட்டி, அமைதிக்கான நோபல் பரிசு அறிவித்துள்ளது.
யார் இவர்?
ஈரானின் வடமேற்கில் உள்ள ஜான்ஜானில் 1972 இல் பிறந்தவர் நர்கீஸ் முகமதி. இயற்பியல் துறையில் பயின்றார். பொறியாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்களில் பணியாற்றியிருக்கிறார். தனது எழுத்தின் மூலமும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். மாணவ பருவத்தில் இருந்தே பெண்களின் உரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடி வருகிறார்.
ஈரான் அரசை விமர்சித்ததற்காக 1998ஆம் ஆண்டு முதன்முறையாக கைது செய்யப்பட்டு விடுதலையானார். 1999ஆம் ஆண்டு பத்திரிகையாளர் தாகி ரஹ்மானியை திருமணம் செய்துகொண்டார்.
2003ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்ந்தார். இந்த மையம் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற உலகின் முதல் இஸ்லாமிய பெண்மணியான ஷிரின் எபாடியால் தொடங்கப்பட்டது ஆகும்.
மரண தண்டனைகளுக்கு எதிராகவும் போராடி வரும் நர்கீஸ் முகமது, சமூக ஆர்வலராக எப்படி மாறினார் என்பதற்கான தனது சிறுவயது நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
“தூக்கிலிடப்படும் சிறைக் கைதிகளின் பெயர் பட்டியலை டிவியில் ஒளிபரப்புவார்கள். அதை எனது அம்மா டிவி முன்பு அமர்ந்து பார்ப்பார். அப்போதிலிருந்தே மரண தண்டனைக்கு எதிரான எனது போராட்டம் தொடங்கியது” என்று கூறியிருக்கிறார்.
நர்கீஸ் முகமது, 2011ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் 2013ஆம் ஆண்டு உடல் நலக் காரணங்களால் ஜாமீன் பெற்றார்.
பின்னர் மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்த அவர் 2015ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தாலும் அமைதி, சமத்துவத்துக்காக குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை.
‘The Reforms’, ‘The Strategy and the Tactics’ போன்ற மக்களின் விடுதலைக்காக புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதில், ‘White Torture: Interviews with Iraninan Women Prisoners என்ற இவரது புத்தகம் மனித உரிமை மன்றத்தில் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்றிருக்கிறது.
இப்படி மக்கள், பெண்கள் மற்றும் அவர்களது சுதந்திரத்துக்காக தனது 51 வயது வாழ்க்கையில் பாதி நாள் சிறையிலேயே கழித்துள்ளார் நர்கீஸ் முகமதி.
மொத்தம் 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார். 5 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 154 கசையடிகள் வாங்கியுள்ளார். இப்படி தண்டனைகள் பெற்றும் சிறையில் இருந்தபடியே அரசியல் கைதிகள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
மாஷா அமினிக்கு நேர்ந்த கொடூரத்துக்கும் நர்கீஸ் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாட்டை உலுக்கிய மாஷா அமினி கொலை விவகாரத்தை எவின் சிறைசாலையில் இருந்தபடியே டிவியில் பார்த்தேன்.
பெண்கள் வார்டில் தொலைக்காட்சியில் இந்த செய்தியை பார்த்தபோது துக்கத்தோடு ஆத்திரம் மூண்டது. சிறையிலேயே ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப எங்களால் முடிந்ததை செய்தோம்.
தற்போது சிறைசாலைகளில் பெண்கள் அடைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எந்தளவுக்கு எங்களை அடைத்து வைக்கிறார்களோ. அந்த அளவுக்கு நாங்கள் வலிமை பெறுவோம்.
கடந்த 7 மாதங்களில் எனது மனித உரிமை செயல்பாடுகளுக்கு எதிராக என் மீது 6 குற்ற வழக்குகள் போட்டுள்ளனர். 10 ஆண்டுகள் 9 மாதம் என தற்போது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையில் கூடுதலாக 2 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எனது புரட்சிகர இயக்கத்தில் இளம் பெண்களின் முயற்சியை பார்க்கும் போது எனது கனவு மற்றும் இலக்குகளை நெருங்கி வருவதாக உணர்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நர்கீஸ் முகமதி தனது இரட்டை குழந்தைகளையும், கணவரையும் பல ஆண்டுகளாக பார்க்கவில்லை. மாஷா அமினி விவகாரத்தில் சிறையிலேயே குரல் கொடுத்ததால் அவருக்கான கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன.
இந்தசூழலில், பெண்களின் சுதந்திரத்துக்காக, மக்களுக்காகவும் போராடி வரும் நர்கீஸ் முகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகமதியின் குடும்பத்தினர் கூறுகையில், ”முகமதிக்கு கொடுக்கப்பட்ட இந்த மரியாதை ஈரானியர்களுக்கு சொந்தமானது. சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான தங்களது போராட்டம் மூலம் ஈரானிய பெண்கள் உலகை கவர்ந்துள்ளனர்.
சுதந்திரத்தை கொண்டு வருவதற்கான நர்கீஸ் முகமதியின் அயராத உழைப்பு மற்றும் அமைதியான பணிக்கு நீடித்த சான்றாக இந்த விருது விளங்குகிறது.
ஆனால் இந்த தருணத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள நர்கீஸ் எங்களுடன் இல்லை. அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டு அவர் எப்படி மகிழ்ச்சி அடைகிறார் என்பதை எங்களால் பார்க்கமுடியவில்லை.
நர்கீஸ் எப்போதும் சொல்வார்… வெற்றி எளிதில் கிடைக்காது ஆனால் நிச்சயம் கிடைக்கும் என்பார். அது நடந்திருக்கிறது” என்கின்றனர்.
122 ஆண்டுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான பரிசு அளிக்கப்படுவது இது 5ஆவது முறை ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19ஆவது பெண் நா்கீஸ் முகமதி.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலா், இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். ஆனால் இந்த நோபல் பரிசு அவருக்கு விடுதலையைப் பெற்றுத் தருமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
போர் மூண்ட இஸ்ரேலில் சிக்கிய தமிழர்கள்… உதவி எண்கள் அறிவிப்பு!
ஜிகர்தண்டா Double X : ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!