முன்னாள் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு, விமானியின் மனித தவறே காரணம் என்று ராணுவ நிலைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அப்போது முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, குரூப் கேப்டன் வருண் சிங் உள்பட 13 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில், “இந்திய விமானப்படையில் 2017 – 2022 காலகட்டத்தில் மொத்தம் 34 விபத்துக்கள் நடந்துள்ளது.
இதில், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த MI-17VS ரக ஹெலிகாப்டர் விபத்துக்கு விமானியின் மனித தவறே காரணம்.
வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, மேக கூட்டத்தின் நடுவே விமானத்தை செலுத்தியுள்ளார். அதில் நிலைதடுமாறி ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஷா ஊர்வலத்திற்கு எதிர்ப்பு: கோவையில் தடையை மீறி பேரணி… அண்ணாமலை கைது!
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!