கொல்கத்தா மற்றும் ஹவுரா நகரங்களை இணைக்கும் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 16, 17 ஆம் தேதிகளில் இரவு 5 மணி நேரம் மூடப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய ரயில் நிலையம் ஹவுரா ரயில் நிலையம்தான். 23 பிளாட்பாரங்களுடன் இயங்கும் இந்த ரயில் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 231 ரயில்கள் வந்து செல்கின்றன. உலகத்திலேயே மிக பிஸியான ரயில் நிலையம் இதுதான். கொல்கத்தாவுக்கு வரும் பயணிகள் ஹவுரா ரயில் நிலையத்தில் இறங்கி இந்த பாலம் வழியாகத்தான் நருக்குள் நுழைவார்கள்.
கொல்கத்தா நகரையும் ஹவுரா நகரையும் இணைக்கும் வகையில்தான் ஹூக்லி நதியின் மேல் ஹவுரா பாலம் கட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும். ஒன்றரை லட்சம் பேர் நடந்தும் கடந்து போவார்கள். உலகின் பிஸியான பாலங்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நகரின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த பாலம் 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது கட்டி முடிக்கப்பட்டது. பாலங்களை கட்ட இங்கிலாந்தில் இருந்து இரும்புகள் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தை கட்ட 26 ஆயிரத்து 500 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹவுரா பாலம் நல்ல நிலையில் உள்ளதா? என்று இரு நாள்கள் சோதித்து பார்க்கப்படுகிறது. இதற்காக நவம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரவில் 5 மணி நேரம் மூடப்படுகிறது. எனவே, இரவு 11.30 முதல் காலை 4.30 மணி வரை வாகனங்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை. இதற்கு முன்னர் 1983 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இது போல ஹவுரா பாலம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி சென்றால்… கொந்தளித்த பிசிசிஐ
சட்டக்கல்லூரி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!